நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகிய இருவரையும் கடந்த அக்டோபர் 25-ம் தேதி அன்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் இருவர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கூடலூர் கிளைச் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இந்நிலையில் இவர்கள் இருவரையும் 10 நாள்கள் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில், நவம்பர் ஆறாம் தேதி அன்று குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றம் முன் நிறுத்திக் கூடுதலாக ஐந்து நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி தனபாலுக்கு ஒருநாள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனபால் பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.8) இவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் நேரில் ஆஜர் படுத்தினர்.
அப்போது வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா இவர்கள் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து, இவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி வரை வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை: ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்