தமிழ்நாடு

tamil nadu

ஆடி அமாவாசை;மூடப்பட்ட மகாமக குளம் - பாஜகவினரின் முயற்சிக்குப்பின் மீண்டும் திறப்பு

By

Published : Jul 28, 2022, 3:17 PM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடவும், திதி தர்ப்பணங்கள் கொடுக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதியளிக்காததைத் தொடர்ந்து, போலீசாருடன் பாஜகவினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டது.

ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை

தஞ்சாவூர்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் மகாமக திருக்குளத்தில் இன்று திதி தர்ப்பணங்கள் செய்யலாம் என நேற்று சுத்தம் செய்து வைத்துவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, மகாமக குளத்தில் உள்ள அதிக அளவு தண்ணீரை கருத்தில்கொண்டு, தர்ப்பணம்செய்ய அனுமதிக்கக்கூடாது என சிலர் அறநிலையத்துறை நிர்வாகத்திடம் கூறியதைத்தொடர்ந்து இன்று (ஜூலை28) அறிவிப்பு பிளக்ஸ் வைத்து, குளத்தின் 4 கரை கேட்டுகளும் இழுத்து பூட்டி மூடப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து புனிதநீராடவும், திதி தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. மாற்று ஏற்பாடாக, குளத்திற்கு வெளியே குளிக்க தற்காலிகமாக, அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்த ஷவரும் மின்தடை காரணமாக வேலை செய்யவில்லை, அதற்கு முன்பே குளித்தவர்களின் நீர் பெரிய அளவில் அப்பகுதியில் உள்ள சாலைகளில் வழிந்தோடி அச்சாலைகளை கடந்துசெல்வோருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.

அரசு துறைகள் இடையே சரிவர தொலைத்தொடர்பு இல்லை: ஆடி அமாவாசை இன்று என்பது முன்பே தெரிந்து இருந்தும், மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை மற்றும் அறநிலையத்துறை ஆகிய அரசு துறைகளிடையே போதுமான அளவிற்கு இணக்கமான போக்கு இல்லாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுத்து, ஒவ்வொரு நேரத்தில் அறிவிப்பதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

இதனால், இன்று மகாமக குளத்தில் புனித நீராடி, திதி தர்ப்பணம் செய்ய வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த குளறுபடிகளை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனைத்தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் பேபி அவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினார்.

பொதுமக்கள் அவதி: அப்போது, பொதுமக்கள் வசதிக்காக, கேட்டை திறக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மகாமக குளத்தின் ஒருபகுதி கேட் காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு பொது மக்கள் புனிதநீராட மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், ஏற்பட்ட குழப்பத்தால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கும்பகோணம் பாலக்கரை காவிரியாற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, அரசலாற்றின் படித்துறை ஆகியவற்றில் பொது மக்கள் புனிதநீராடவும், திதி தர்ப்பணங்கள் செய்யவும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அங்கு ஏராளமானோர் புனிதநீராடி, புரோகிதர்களிடம் வாழை இலை போட்டு அதில் அரிசி, காய்கறி, தேங்காய், பழங்கள், பூக்கள், வைத்து கறுப்பு எள்ளுடன் திதி தர்ப்பணங்கள் அளித்தனர். காவிரியாற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால், பாதுகாப்புக்கருதி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிலைய அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு, பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி அமாவாசை;மூடப்பட்ட மகாமக குளம் - பாஜகவினரின் முயற்சிக்குப்பின் மீண்டும் திறப்பு

இதையும் படிங்க: ஆடி அமாவாசை: காவிரி துலா கட்டம் முதல் காவிரி சங்கமம் வரை புனித நீராடிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details