தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சதுர்த்தி: தஞ்சையில் மேளதாளங்களுடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்! திரளான மக்கள் கண்டு ரசித்தனர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:35 AM IST

Vinayagar Chathurthi celebration: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் மேளதாளங்கள் முழங்க, ஆரவாரத்துடன் பொது மக்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.

Vinayagar Chathurthi celebration
தஞ்சையில் மேளதாளங்களுடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

தஞ்சையில் மேளதாளங்களுடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

தஞ்சாவூர்: மகாமக நகர், ஆன்மீக நகர் என போற்றப்படுகிறது கும்பகோணம் மாநகரம். இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 14 ஆம் தேதி வியாழக்கிழமை அமாவாசை தினத்தில் இருந்து, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், 6 அடி முதல் 10 அடி உயரத்தில் 50க்கும் மேற்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நிறுவப்பட்டது.

இதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் சதுர்த்தியின் முக்கிய நிகழ்வான, விநாயகர் சதுர்த்தி விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகரில் அமைந்து உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் வண்ண வண்ண மின் விளக்குகளாலும், பல்வகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மகாமககுளம் அருகேயுள்ள வீரசைவ பெரிய மடம் அருகே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

பிறகு அங்கிருந்து, அனைத்து விநாயகர் சிலைகளும் தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. விநாயகர் விஜர்சன ஊர்வலம் நாதஸ்வர, மேள தாளம் வாத்தியங்கள், தப்பாட்டம் உள்ளிட்ட பலவிதமான வாத்தியங்கள் முழங்க கோலாகமாக நடைபெற்றது.

பின்னர் இந்த ஊர்வலம், திட்டமிட்டபடி தலைமை அஞ்சலக சாலை, நாகேஸ்வரன் வடக்கு, உச்சிபிள்ளையார் கோயில், சாரங்கபாணி தெற்கு வீதி, பெரிய பள்ளி வாசல் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இசை வாத்தியங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் அங்கு முன்னச்சரிக்கை நடவடிக்கையாக, வஜ்ரா வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க ஏராளமான அதிவிரைவு படையினரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் இராமசாமி கோயில் சன்னதி, பூக்கடைத்தெரு, டிஎஸ்ஆர் பெரிய கடைவீதி, காந்திப்பார்க், நகர மேல் நிலைப்பள்ளி சாலை, மடத்துத்தெரு என முக்கிய வீதிகள் வழியாக காவிரியாற்றின் பழைய பாலக்கரை வரை சுமார் மூன்றரை மணி நேரத்தில் ஊர்வலத்தின் முதல் பகுதி விநாயகர் சிலைகள் கடந்து சென்றது. அதனைத் தொடர்ந்து, அனைத்து விநாயகர் சிலைகளும் ஒவ்வொன்றாக பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீசி விஜர்சனம் செய்யப்பட்டது.

மேலும் விஜர்சனத்தை காண மதங்களுக்கு அப்பாற்பட்டு இஸ்லாமியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வமாக கலந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தினை முன்னிட்டு ஊர்வல பாதை முழுவதும் முன்னச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்ற செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத் தலைமையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என 250க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: இனி தமிழகத்தின் 8 நகரங்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தமிழக அரசு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details