தமிழ்நாடு

tamil nadu

வாழ வீடு இல்லை - வேதனையில் கிராம மக்கள்

By

Published : Aug 21, 2021, 3:47 PM IST

இடிந்து விழும் நிலையில் காணப்படும் வீடுகள்
இடிந்து விழும் நிலையில் காணப்படும் வீடுகள் ()

தஞ்சாவூரிலுள்ள மனவயல் கிராம மக்கள் வாழ்வதற்கு வீடும் இல்லாமல், இடுகாட்டிற்கு செல்ல வழியுமில்லாமல் இல்லாமல் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் மனவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாடம் விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்திவருகின்றனர்.

இவர்களுக்கு குடியிருக்க இடம், வீடு இல்லாததால் அரசு மூலம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வீடுகள் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் வீடுகள் அனைத்தும் மேல் கூரை, பக்கச் சுவர்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அபாயம் ஏற்படும் வகையிலுள்ள வீடுகள்

இது தவிர கட்டடம் சேதம் ஆகியுள்ள நிலையில் மழை காலங்களில் மழைநீர் கசிந்து வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இவர்கள் தூங்காமல் விழித்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் கட்டடத்தின் மேற்கூரையிலுள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் ஒரு சிலருக்கு காயம்கூட ஏற்பட்டிருக்கிறது.

இவ்வளவு இக்கட்டான சூழலில் மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர்களுக்கு வருமானம் ஏதும் இல்லாததால் இந்த வீடுகளை புதுப்பிக்க இயலவில்லை. எனவே இவர்களின் நிலையை கருதி உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் இந்த வீடுகளை புதுப்பித்து தரவேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அரசுக்குக் கோரிக்கை

இந்த மக்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட இடுகாட்டுக்குச் செல்ல வழியில்லாமல் ஒவ்வொரு முறையும் இறந்தவர்களை அடக்கம் செய்ய கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைக்கும் இடுகாட்டுக்கும் இடையில் மிகப்பெரிய வாய்க்கால் உள்ளதால் வாய்க்காலை கடப்பது என்பது மிகுந்த சிரமமாக உள்ளது. அதிலும் இறந்தவர்களை எடுத்துச் செல்ல வாய்க்கால், முட்புதர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த வாய்க்காலில் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுத்தால் எந்த சிரமமும் இருக்காது எனக் கருதுகின்றனர்.

இடிந்து விழும் நிலையில் காணப்படும் வீடுகள்

இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வரும் இந்த மக்களின் நிலை கருதி பழுதடைந்த நிலையிலுள்ள இவர்களது வீடுகளை புதுப்பித்து தரவேண்டும். மேலும், இடுகாடு செல்வதற்கு பாதை வசதி செய்து தரவேண்டும் என அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

ABOUT THE AUTHOR

...view details