தமிழ்நாடு

tamil nadu

டிடிவி தினகரன், சசிகலாவுக்கு தூது! ஓபிஎஸ்சின் அடுத்த நகர்வு என்ன?

By

Published : Mar 19, 2023, 10:34 AM IST

டிடிவி தினகரன், சசிகலா, ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி உள்ளிட்டோருடன் விரைவில் சந்திப்பு நடைபெறும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சை:அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று (மார்ச்.18) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், "புரட்சித் தலைவி ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி சின்னா பின்னமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். பின்னர் தான், தெரிந்தது பேராசைக்காரன் கையில் இந்த கட்சி போய்விட்டது என்பது. தன் சுயநலம் தான் முக்கியம் என நினைப்பவர் கையில் இந்த கட்சி போய்விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை யாராலும் மாற்ற முடியாது கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில், ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளதாகவும், இதுவரை எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை என்றும் புரட்சித் தலைவி நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொன்ன பிறகும் கூட பதவிக்கு வருவதற்கு துடிக்கிறாயே, உனக்கு இதயம் இருக்கிறதா? நீ மனிதனா? நன்றி உள்ளவனா? விசுவாசம் உள்ளவனா? அம்மா பெயரை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈபிஎஸ் என்ற சர்வாதிகாரி கையில் இந்த கட்சி போனால் அது ஜாதி கட்சியாக மாறிவிடும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், சட்ட விதிகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்று உள்ளதால் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற ஏசி சண்முகம், சைதை துரைசாமி உள்ளிட்ட எல்லோரையும் ஒன்று சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூடிய சீக்கிரத்தில் சசிகலாவுடன் சந்திப்பு நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஜெயக்குமார் ஒரு வழக்கறிஞர், அவர் எதை வைத்து சொல்கிறார் என தெரியவில்லை என்று கூறினார். நிச்சயமாக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வரவே முடியாது என்றும் எடப்பாடியின் வேலை சிறு பிள்ளைத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது, பிக் பாக்கெட் திருடன் செய்வது போல உள்ளது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்திற்கு வந்த வைத்திலிங்கத்திற்கு, ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டு, வீரவாள் உள்ளிட்ட நினைவுப் பொருட்கள் கட்சியினரால் வழங்கப்பட்டது. பின்னர், சமாதான புறாக்களை பறக்க விட்டார். 2026 வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை யாராலும் மாற்ற முடியாது எனக் வைத்திலிங்கம் கூறி வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட நோட்டீஸில் அவரது பெயருக்கு கீழ் இணை ஒருங்கிணைப்பாளர் என அச்சடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்..

ABOUT THE AUTHOR

...view details