தஞ்சாவூர்:கும்பகோணத்தில் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் கடந்த செப். 21ஆம் தேதி இரவு கட்டடத் தொழிலாளிகளான சௌந்தர்ராஜன் (வயது 43) மற்றும் பாலகுரு (வயது 42) ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இருவரும் கூடுதல் போதை வேண்டி, போதை மாத்திரையுடன் சானிடைசர் என கருதப்படும் கிருமிநாசினி மருந்தை கலந்து குடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (செப்.22) காலை சக்கரப்படித்துறை காவிரி ஆற்றின் கரை அருகே இருவரும் சடலமாக இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார், இருவரின் உடலைகளையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள், இவர்களுடன் மேலும் சிலர் அங்கு மது குடித்ததாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர் குழு ஆதாரங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, கடந்த 21ஆம் தேதி கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர் என விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இறந்த நபர் யார் என்பது தெரியாத காரணத்தால், உடலை அடையாளம் தெரியாத நபர் என கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கிடங்களில் வைத்து இருந்தனர்.