தமிழ்நாடு

tamil nadu

தஞ்சையில் நூற்றாண்டுகளை கடந்த நகை அச்சு மாதிரிகள் சேகரிப்பு!

By

Published : May 25, 2023, 11:02 PM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர், நூற்றாண்டுகளை கடந்த பழமை வாய்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை அச்சு மாதிரிகளை வீட்டில் சேகரித்து வைத்து அருங்காட்சியமாக காட்சிக்கு வைத்துள்ள சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நூற்றாண்டுகளை கடந்த நகை அச்சு மாதிரிகள் சேகரிப்பு

தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (61). இவர், தங்க நகைகள் செய்ய பயன்படும் அசல் அச்சு மாதிரிகள் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். தங்க நகை செய்பவர்கள் இவரிடம் வந்து ஆர்டர் கொடுத்து அதன் பேரில் இந்த அச்சுக்களை வாங்கிச் சென்று தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நகையில் இந்த அழகிய டிசைனை செய்து நகையாக தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நான்கு தலைமுறைகளாக அவரது முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தி வந்த நூற்றாண்டுகளை கடந்த, தங்க நகைகள் செய்ய பயன்படும் அச்சு மாதிரிகளை சேகரித்து, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு அச்சு மாதிரிகளை பாதுகாத்து தனது வீட்டில் அருங்காட்சியமாக சீனிவாசன் வைத்துள்ளார். இங்கு வைக்கப்பட்டுள்ள அச்சு மாதிரிகள், நுணுக்கமான, கைவேலைப்பாடுடன் கூடிய மிகவும் கலை நயமிக்கவை, விலைமதிப்பு உடையவை ஆகும். இந்த அச்சு உருக்கு இரும்பால் செய்யப்படுகிறது.

இது குறித்து சீனிவாசன் கூறுகையில், “எனது முன்னோர்கள் காலத்திலிருந்து தங்க நகைகள் செய்ய பயன்படும் அச்சு மாதிரிகள் சுமார் 15 ஆயிரம் அச்சு மாதிரிகளை சேகரித்து பாதுகாத்து வருகிறேன். சுமார் நாற்பது ஆண்டு காலமாக இந்த பாரம்பரியமான தொழிலை செய்து வருகிறேன். இந்த மாதிரிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இதுபோன்ற அச்சுக்கள் இருக்காது” என பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சாவூர் அரண்மனைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், எனது வீட்டிற்கு வந்து அங்கு கண்காட்சிபில் வைத்துள்ள மிகவும் நுட்பமான, கை வேலைப்பாடுடன் கூடிய அச்சு மாதிரிகளை வந்து பார்த்து வியந்து செல்கின்றனர். தற்போது தங்க நகைகளின் விலை ஏற்றத்தால் அச்சு மாதிரிகள் செய்யும் தொழில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நூற்றாண்டுகளை கடந்த இந்த நகை அச்சு மாதிரிகளில், காசு மாலை, தசாவதார மாலை, மாங்காய் மாலை, செயின் முகப்பு, ஒட்டியாணம், தோடு, நெற்றி பொட்டு, காது ஜிமிக்கி, கை மோதிரம், நெக்லஸ், டாலர்கள், நடராஜர், லிங்கம், அம்பாள், முருகன், கிருஷ்ணன், பிள்ளையார் சுவாமி மாலைகள், கல்நெக்லஸ், கல் வளையல், இனாமல் மோதிரம், தொங்கட்டான் அச்சுகள் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சு மாதிரிகள் உள்ளன.

இவரால் தயார் செய்யப்பட்ட நகை அச்சுகள், கனடா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் ஆகிய வெளிநாடுகளுக்கு தங்க நகைகளின் டிசைனாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றாண்டுகளை கடந்த பழமை வாய்ந்த நகை அச்சு மாதிரிகள், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் மட்டுமே இன்றும் பழமை மாறாமல் காணப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா.. கிரைண்டர் மிஷினில் வைத்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details