தமிழ்நாடு

tamil nadu

சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 4:30 PM IST

Daughter in law arrested for killing mother in law: தனது கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை மருமகள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது
சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது

தஞ்சாவூர்: மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை மருமகள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கழுகப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 40). இவரது மனைவி பாத்திமா பானு (வயது 35). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மனைவி பாத்திமா பானு கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீசார் ஜேம்சை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திருச்சி சிறையில் உள்ள ஜேம்சை அவரது மனைவி பாத்திமா பானு ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் ஜேம்சின் தாயார் ஆரோக்கிய மேரி (வயது 58) தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை அறிந்த, பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம் எனவும், ஜாமீனில் எடுத்தால் அவர் வெளியில் வந்த தன்னிடம் சண்டை போடுவார் எனவும் கூறி தடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

ஆனால், அதைக் கேட்காத ஆரோக்கிய மேரி மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.10) இரவு மாமியார் மருமகள் இடையே ஜேம்சை ஜாமீனில் எடுப்பது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாத்திமா பானு தனது மாமியார் ஆரோக்கிய மேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், சம்பவ இடத்திலேயே ஆரோக்கியமேரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் பாத்திமா பானு மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து பாத்திமா பானுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை மருமகள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை.. நான்கு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details