ETV Bharat / state

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை.. நான்கு பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 1:59 PM IST

Trichy murder case: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தவர் அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Ramajayam murder case subject of investigation prabhakaran killed police arrested four people in trichy
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை

திருச்சி: வள்ளுவன் நகரைச் சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் திருச்சி காவல் நிலையத்தில் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன், நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று (டிச.11) இரவு 7 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து, அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆபிசர்ஸ் காலணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் முககவசம் அணிந்தபடி வந்த கும்பல், பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, விசாரணையானது நடத்தப்பட்டது. மேலும், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

மேலும், நாளை மறுநாள் மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிவித்த நிலையில், கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.