தமிழ்நாடு

tamil nadu

Chithirai Thiruvizha: திருவிழாவுக்கு தயாராகும் குடந்தை சாரங்கபாணி கோயில் சித்திரை தேர்!

By

Published : May 3, 2023, 7:26 AM IST

Updated : May 3, 2023, 9:49 AM IST

சித்திரை திருவிழாவையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலில் பெரிய தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளதால் அலங்கார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Chithirai Festival
சித்திரை திருவிழா

திருவிழாவுக்கு தயாராகும் குடந்தை சாரங்கபாணி கோயில் சித்திரை தேர்!

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார்.

தாயார் கோமளவள்ளி இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் என போற்றப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் பாடல்கள் தந்த பெருமை மிகு ஸ்தலம். இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 26 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை திருவிழாவில் நாள்தோறும் இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், புன்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வானங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

தற்போது விழாவின் ஒன்பதாம் நாளான மே 4 ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இது 500 டன் எடையுடன், 30 அடி விட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 110 அடி உயரம், அலங்கார மேற்பரப்பு மட்டும் 47 அடியையும் கொண்டது. எனவே இதனை காண அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று வடம் பிடிக்கவும், தேரில் உலா வரும் சுவாமிகளை தரிசனம் செய்வும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேரோட்டத்திற்காக, தேர் கட்டும் பணி, கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது நிறைவு கட்டத்தை எட்டி சுமார் 96 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது. இன்னும் 22 அடி நீளமும், 5 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட 4 பிரமாண்டமான பெரிய குதிரைகளை பொறுத்தும் பணியும், அதுபோலவே பிரமாண்டமான இந்த தேரை இழுக்க பயன்படுத்தப்படும் மிக நீண்ட வடமும் தேருடன் பொருத்தும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது.

இவை இரண்டும் இன்று முற்பகல் நடைபெற்று, நாளை (4 ஆம் தேதி வியாழக்கிழமை) காலை 07.30 முதல் 08.27-க்குள் ரிஷப லக்னத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த தேரோட்டத்தில் ஏராளானமான பக்தர்கள் வருகை புரிய இருப்பாதால், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: The Kerala Story: சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்யக் கோரி மனு!

Last Updated : May 3, 2023, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details