தமிழ்நாடு

tamil nadu

"ஸ்டார்ட்அப் தென்காசி": தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டம்!

By

Published : Mar 13, 2023, 9:52 AM IST

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக ஸ்டார்ட்அப் தென்காசி என்ற தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.

ஸ்டார்ட்அப் தென்காசி
ஸ்டார்ட்அப் தென்காசி

ஸ்டார்ட்அப் தென்காசி

தென்காசி:ஆசாத் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக ஸ்டார்ட்அப் தென்காசி என்ற தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்தளம்பாறையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான சோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு தொழில் முனைவோர்கள் பங்கேற்று தென்காசி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த ஸ்டார்ட்அப் தென்காசி மூலம் தென்காசியில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் தெரிவித்தனர். சோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ஸ்டார்ட்அப் தென்காசிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவர் பேசும்போது பொதிகை தென்றலுக்கு மட்டும் பெயர் பெற்ற தென்காசி, இனி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெயர் பெற்று விளங்கும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு சோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டார்ட்அப் தென்காசியில் 200க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பதிவு செய்து, அதில் 20 பேர் தேர்வான நிலையில், 12 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறினார்.

முதல் முறையாக தென்காசி மாவட்டத்தில் ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி நடத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசிய அவர், ஸ்டார்ட்அப் தென்காசி மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தின் பொருளாதாரம் வளர்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இளைஞர்களின் திறமையை நினைத்து பெருமை படுவதாகவும், தோல்வியை கண்டு இளைஞர்கள் கவலைப்படக் கூடாது எனவும், இளைஞர்களிடம் தன்னார்வம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். கரோனாவுக்கு பிறகு உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் சவால்கள் இருந்தாலும், நம்மிடம் சுய சார்பு தொழில் இருக்க வேண்டும் என்ற அவர், அப்போது தான் பொருளாதாரம் நமது கையில் இருக்கும் எனவும், ஸ்டார்ட்அப் தென்காசி அதை நோக்கி செல்வதாக கூறினார்.

தென்காசி மாவட்டம் சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக உதயமானதாலும், பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இல்லாததாலும், பொருளாதார ரீதியாக மாவட்டத்தை மேம்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்களின் நலனுக்காக ஸ்ரீதர் வேம்பு மத்தளம்பாறையில் சோகோ மென்பொருள் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தற்போது தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே மென்பொருள் நிறுவனம் சோகோ நிறுவனம் மட்டும் தான். இது போன்ற சூழ்நிலையில் சோகோ நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த ஸ்டார்ட்அப் தென்காசி மூலம் விரைவில் தென்காசியில் கூடுதலாக மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் அமைய இருக்கிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பொருளாதாரம் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 12 வருடத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் சென்னையின் அடையாளம்!

ABOUT THE AUTHOR

...view details