செண்பகவல்லி அணை’ தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது.. அண்ணாமலை கேள்வி ? தென்காசி:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' 2ஆம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப். 4) தொடங்கினார். புளியங்குடி பகுதியில் உள்ள சிந்தாமணி பேருந்து நிலையம் அருகே தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "சில மாதங்களில் வாசுதேவநல்லூர் தொகுதியில் இருக்கும் எலுமிச்சைக்கு விரைவில் புவிசார் குறியீடு வரும். தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, ஆனால் டாஸ்மாக்கில் வற்றாமல் டாஸ்மாக் தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது.
திருப்பூர், பல்லடம் பகுதியில் வீட்டின் வாசலில் இருந்து மதுகுடிக்காதீர்கள் என கூறியதால் 4 பேரை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அது போல் திருநெல்வேலியில் பாஜக நிர்வாகி கொலை செய்யபட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. செண்பகவல்லி அணையில் இருந்து 250 ஆண்டுகளுக்கு மேலாக தன்ணீர் வாசுதேவநல்லூருக்கு வந்தது.
ஆனால் கேரளா அரசு திட்டம் போட்டு அந்த அணையை பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் யாரும் போகத வண்னம் அணையின் நீர் நமக்கு கிடைக்காமல் செய்துள்ளது. திமுக தமது தேர்தல் அறிக்கையில் 84ல் தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிறது. செண்பகவல்லி அணையில் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கர்மவீரர் காமராஜர் நல்ல ஒரு முதல்வராக இருந்தார் என்றால் குடும்ப ஆட்சியில் வரவில்லை. எத்தனையோ குற்றச்சாட்டுகளை நாங்கள் வைத்தாலும் கூட கஷ்டப்பட்டு வந்த அரசியல்வாதி கலைஞர் கருணாநிதி. குடும்ப ஆட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மக்களின் கஷ்டம் தெரியாது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மத்தை வேர் அறுப்பேன் என்று கூறுகிறார். அவரது தாத்தா கருணாநிதியே இதுகுறித்து பேசி தோல்வி அடைந்து உள்ளார். இந்தியாவில் 5 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று பல்வேறு தேர்தல்கள் நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டுவர இருக்கிறோம்" என்று அண்ணாமலை பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?