தமிழ்நாடு

tamil nadu

விரைவில் 120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்!

By

Published : Nov 13, 2021, 4:25 PM IST

Updated : Nov 13, 2021, 5:25 PM IST

காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து எதிர்பார்த்த அளவு வராததாலும், மழை நின்றதாலும் உபரி நீரை வெளியேற்றும் அளவு மிகவும் குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை

சேலம்:மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. மழை, பாசனத் தேவை குறைந்ததால் அக்டோபர் 12ஆம் தேதி அணையின் நீர் திறப்பு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவைவிட, அணைக்கான நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்ட படிப்படியாக உயரத் தொடங்கியது. நவம்பர் 8ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 118 அடியை கடந்த நிலையில் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை நவம்பர் 9ஆம் தேதி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும், கன மழை எச்சரிக்கை காரணமாகவும் அணைக்கு வரும் நீரை முழுவதும் அப்படியே வெளியேற்றவும், அணையின் நீர்மட்டத்தை 119 அடியிலேயே பராமரிக்கவும் முடிவுசெய்தனர்.

நவம்பர் 9ஆம் தேதி காலை 5 மணிக்கு, விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் 5.30 மணிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. நீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித் துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினர்.

விநாடிக்கு 20,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட உபரி நீர், அணையின் நீர் வரத்திற்கு ஏற்ப அவ்வப்போது குறைத்து வெளியேற்றப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 12,000 கன அடி வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியிலேயே பராமரிக்கப்பட்டது.

தற்போது நீர்வரத்து எதிர்பார்த்த அளவு வராததாலும், மழை நின்றதாலும் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி மட்டும் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 16,020 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று நண்பகல் நிலவரப்படி, நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டிஎம்சியாகவும், அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 100 கன அடி அளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மேட்டூர் நீர்வரத்து உயர்வு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Last Updated : Nov 13, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details