தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் இருந்து திருப்பதி, சீரடிக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை: சேலம் எம்பி பார்த்திபன் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 8:52 PM IST

Salem MP Parthiban: சேலம் விமான நிலையத்தில் இருந்து திருப்பதி மற்றும் சீரடிக்கு நேரடி விமானச் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Salem MP Parthiban Press Meet
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்

சேலம்:சேலம்விமான நிலையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் ரமேஷ், தொழில் முனைவோர், காவல்துறையினர் மற்றும் விமான நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், “சேலம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தில் பெங்களூர், கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

சேலம் - சென்னை விமானச் சேவை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சேலத்திலிருந்து 2167 பேர் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானம் வாயிலாகச் சேலத்திற்கு 2436 பேர் வந்துள்ளனர். 130 முறை விமானச் சேவை நடைபெற்றுள்ளது. சேலம் - சென்னை விமானச் சேவை பெரும்பாலும் முழுமையாகப் பயணிகளுடன் சென்று வருகிறது.

இந்த விமானச் சேவை அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சேலத்திலிருந்து திருப்பதி மற்றும் சீரடிக்கு நேரடி விமானச் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நாள்தோறும் 5 விமானங்கள் வந்து செல்லும் நிலையில், இரவு நேரங்களில் விமானங்களை நிறுத்தி வைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் விமான நிலையத்தில் 1800 மீட்டர் விமான நிலைய ஓடுபாதை தற்போது உள்ளது. இதனை 3 ஆயிரம் மீட்டாராக உயர்த்திடும் வகையில் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமானநிலைய விரிவாக்கம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலத்திலிருந்து முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு என்னுடைய சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளேன்.” என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஓமலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பத்திரப் பதிவு துறையில் பகீர் மோசடி.. மௌனம் காக்கும் லஞ்ச ஒழிப்புக் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details