தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அஸ்ஸாம் மீட்புக் குழுவினரிடம் ஒப்படைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:03 PM IST

Assam Youth: சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அஸ்ஸாம் மாநில இளைஞர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுமதி முன்னிலையில் திப்ருகர் சட்டப் பணிகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

assam rescue team
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அஸ்ஸாம் மீட்பு குழுவினரிடம் ஒப்படைப்பு

சேலம்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஜோய்முகர் டண்டி. இவரது மனைவி ருக்மணி டண்டி. இந்த தம்பதியின் மகன் பிஸ்வஜித். இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காவலாளியாகப் பணிபுரிய அழைத்து வரப்பட்டு பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிஸ்வஜித், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி சேலத்தில் மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சேலம் லிட்டில் ஹார்ட்ஸ் மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். பின் உடல் நலம் மற்றும் மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பு நீதிபதியும், செயலாளருமான தங்கராஜ், சேலம் லிட்டில் ஹார்ட்ஸ் மனநல மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பிஸ்வஜித் குறித்து கேட்டறிந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், அஸ்ஸாம் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு பிஸ்வஜித் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், திப்ருகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் இளைஞரின் பெற்றோரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அஸ்ஸாம் மாநில முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இளைஞர் பிஸ்வஜித்தின் பெற்றோரைத் தேடும் பணியில் சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் திப்ருகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து செயல்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால், தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டப்பணிகள் உறுப்பினர், செயலர்கள் மற்றும் சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி ஆகியோருக்கு காணொளிக் காட்சி மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே, இளைஞரின் பெற்றோர்கள் அஸ்ஸாம் திப்ருகர் மாவட்டம் ஒப்புலியா என்ற கிராமத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, காணொளி மூலம் மகனுடன் பேச வைத்து உறுதிபடுத்தப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரிந்திருந்த பெற்றோர், தங்களது மகன் பிஸ்வஜித்தை காணொளிக் காட்சி மூலம் பார்த்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

இதனிடையே தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும் சேலத்தில் மீட்கப்பட்ட பிஸ்வஜித், அஸ்ஸாம் திப்ருகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவினரிடம் நேற்று (அக்.3) ஒப்படைக்கப்பட்டார். சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி மற்றும் சார்பு நீதிபதி தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், லிட்டில் ஹார்ட்ஸ் மனநலம் குன்றியோர் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் ரிஸ்வான், பைசுல் ரிஸ்வான், திப்ருகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலக ஊழியர் அகில் தாஸ், காவல் உதவி ஆய்வாளர் முகோத் கோகோய், இளைஞரின் சகோதரர் கிருஷ்ணா டண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இணைய சேவை இயங்காததால் ஸ்தம்பித்த சென்னை விமான நிலையம்; 20 விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details