ETV Bharat / state

இணைய சேவை இயங்காததால் ஸ்தம்பித்த சென்னை விமான நிலையம்; 20 விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 10:02 AM IST

Chennai airport server down issue: சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணி வரை (சிஸ்டம் டவுனாக) இணையதளம் இயங்காததால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Chennai airport server down issue
இணைய சேவை இயங்காததால் ஸ்தம்பித்த சென்னை விமான நிலையம்

சென்னை: சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுண்டர்களில் கம்பியூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். அந்த கம்பியூட்டர்கள் இயங்குவதற்கான இணையதளங்கள் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இயங்கவில்லை.

இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் கம்பியூட்டர் மூலமாக வழங்க முடியவில்லை. இதையடுத்து அந்தந்த விமான நிறுவன கவுண்டர்களில் உள்ள ஊழியர்கள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதி கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு கவுண்டர்களிலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விமானங்களில் பயணிகள் ஏறுவதும் தாமதம் ஆகியது. இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் இன்று அதிகாலை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூரு உள்ளிட்ட 12 விமானங்களும் என மொத்தம் 20 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

ஆனால், சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “இணையதள இணைப்பில் திடீரென ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சர்வர்கள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து ஒவ்வொரு கவுண்டர்களிலும் கூடுதலாக ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்களை மேன்வல் மூலம் கைகளால் எழுதி கொடுக்கச் செய்தோம்.

இதனால் பயணிகள் விமானங்களில் ஏறுவது தாமதம் ஆகியதால், விமானங்கள் புறப்படுவதிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 6 மணிக்கு மேல் இணையதள இணைப்பு சீராகிவிட்டது. எனவே, விமான சேவைகளும் தற்போது வழக்கம்போல் நடக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை; சென்னை மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.