தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19 முன்னெச்சரிக்கை : 'முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்'

By

Published : Apr 15, 2020, 3:05 PM IST

சேலம் : சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் பொது வெளிகளில் வந்தால் நாளை முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் எச்சரித்துள்ளார்.

Covid-19 Precaution: Fines if not wearing a mask- Commissioner Action
கோவிட்-19 முன்னெச்சரிக்கை : முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் - ஆணையாளர் அதிரடி உத்தரவு!

உலக அளவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 30 நாட்களாக இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்து இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிகமுள்ள சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் பொது வெளிகளில் வந்தால் நாளை முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அனைத்தும் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதற்கு ஏதுவாக விசாலமான பகுதிகளுக்கு மாற்றியமைப்பட்டுள்ளது.

மேலும், மாநகர் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் வாகனங்கள், கைத் தெளிப்பான்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தினசரி அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு அதிகமாக வெளியில் வருவதை தவிற்கும் பொருட்டு மாநகராட்சி சார்பில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 70 பகுதிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கக் கூடிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மாநகராட்சி அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் - ஆணையாளர் அதிரடி உத்தரவு!

குறிப்பாக, கரோனா தொற்று பரவக் கூடிய விதம் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்கள் பொது வெளிகளுக்கு வரும் பொழுது முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என பல்வேறு நிலைகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னரும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வரும் நிலை தற்போது வரை உள்ளது.

எனவே தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16.04.2020 முதல் பொது வெளிகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது வெளிகளில் வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாநகரப்பகுதிகளில் செயல்படும் மளிகைக்கடைகள், மருந்தகங்கள், உழவர் சந்தைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், காய்கறிகடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க :சேலத்தில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details