சேலம்: மேட்டூர் அணையின் 16 கண் மதகு உபரி நீர் போக்கு பகுதியில், விநாயகர் சிலையை கரைக்க சென்ற பள்ளிச் சிறுவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) ஆகிய இருவரும், தங்களது நண்பர்கள் சிலருடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர். அதற்காக அவர்கள், தங்களது வீட்டின் அருகே அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து, சிலையைக் கரைப்பதற்காக தொட்டில்பட்டி அருகே 16 கண் மதகு உபரி நீர் போக்கு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், குட்டை போல் தேங்கி உள்ள தண்ணீரில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது சந்தோஷ் மற்றும் நந்தகுமார் இருவரும் சேற்றில் சிக்கி மூழ்கி உள்ளனர். இதை கண்ட மற்ற இரண்டு சிறுவர்கள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர்.