தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்தாம் நூற்றாண்டு நாணயங்களை கண்டெடுத்த அரசுப்பள்ளி மாணவி

ராமநாதபுரம் அருகே அரசுப்பள்ளி மாணவி முனீஸ்வரி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் இலங்கை நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

பத்தாம் நூற்றாண்டு நாணயங்கள்
பத்தாம் நூற்றாண்டு நாணயங்கள்

By

Published : Dec 16, 2021, 8:54 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தை அடுத்து திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்குப் பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற மாணவி முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 இலங்கை நாணயங்களை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கூறுகையில், ”வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் நாணயங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாணவி கண்டெடுத்த இந்த நாணயங்களின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன.

போர் வெற்றியைக் கொண்டாடும் 'சிறப்பு நாணயங்கள்’

அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் 'ஸ்ரீராஜராஜ' என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இக்காசில் உள்ள நபர் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறார்.

இதனை ஈழக்காசுகள் என்றும் அழைப்பர். மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் இந்த ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டிலிருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது. மாணவி கோரைக்குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்றும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

பத்தாம் நூற்றாண்டு நாணயங்கள்

இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர்களின் ஆளுகையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்திலும் புழக்கத்திலிருந்துள்ளது.முன்னதாக ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமண் குண்டு, அழகன் குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பசியால் சமையலறையின் ஜன்னலை உடைத்து தள்ளிய யானை

ABOUT THE AUTHOR

...view details