தமிழ்நாடு

tamil nadu

வேங்கைவயல் விவகாரத்தில் 2 மாதத்தில் அறிக்கை?-ஓய்வு பெற்ற நீதிபதி சொல்வது என்ன?

By

Published : May 6, 2023, 7:53 PM IST

வேங்கைவயல் விவகாரம் குறித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய முயற்சிக்கப்படும் என, ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.

vengaivayal
வேங்கைவயல்

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 105 நாட்களுக்கு மேலாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது உறுதியானது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி ஏற்கனவே 3 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 8ம் தேதி மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் இன்று (மே 6) வேங்கைவயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, அரசால் அந்த பகுதி மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மனிதக்கழிவு கலக்கப்படுவதற்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நிலை எப்படி இருந்தது? அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை குளோரின் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி சத்யநாராயணன், "வேங்கைவயல் விவகாரத்தில் இன்று முதற்கட்ட விசாரணை துவங்கப்பட்டுள்ளது. எனக்கு 2 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முயற்சி செய்வேன். விசாரணை பற்றி தற்போது முழுமையாக கூற முடியாது. அவ்வாறு கூறினால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது.

ரத்த மாதிரி சேகரிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள 8 பேரில் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கு செல்லும்.வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர்கள் சுய நினைவற்றவர்கள். சம்பந்தப்பட்ட பகுதியில் சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் டவர் உள்ளிட்டவை இல்லாததால், தடயங்களை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி வருவதால் அதற்கு உன்டான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அனைத்து குற்ற வழக்குகளுக்கும் உடனடியாக தீர்வு காண முடியாது. சூழ்நிலைகள், ஆதாரங்கள், தடயங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் வழக்குக்கு தீர்வு காண முடியும்" என்றார்.

இதையும் படிங்க: கடல் அரிப்பை தடுக்க செயற்கை பாறை: மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details