தமிழ்நாடு

tamil nadu

"எந்த துறை வைத்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் எள்ளளவு கூட பயப்பட மாட்டோம்" - அமைச்சர் ரகுபதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:01 PM IST

Minister Regupathy: மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, அமலாக்கத்துறை அதிகாரி மீதான வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து முதலமைச்சரே முடிவு செய்வார் எனக் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டை:அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (டிச.3) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.

அதில் சிறந்த மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளுக்கான விருதும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, "யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னாள் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

யார் தவறு செய்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்து தவறு செய்தாலும், அவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தியுள்ளது, தமிழ்நாடு முதலமைச்சரின் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. எங்களுக்கு தகவல் கிடைக்கின்ற போது எந்த பதவியில் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று அந்த தவறை கையும் களவுமாக பிடிப்பதுதான் லஞ்ச ஒழிப்பு துறையின் கடமை.

அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து எங்களை மிரட்டினாலும், நாங்கள் எள்ளளவு கூட பயப்பட மாட்டோம் என்று தெளிவாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த அரசு யாருக்கும் பணியாது, அஞ்சாது. அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது. இருப்பினும் அப்பாவு துணிச்சலானவர். அவருக்கு வந்த மிரட்டலை அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான சட்ட மசோதாவில் ஆளுநர் கேட்கின்ற விளக்கங்களை அளித்து, மீண்டும் அதனை ஆளுநருக்கு திருப்பி அனுப்புவோம். என் மீதும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி ஆகியோர் மீதும் அதிமுக அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாங்கள் நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.

அதன்படி நீதி எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் சரி, உயர்நீதிமன்றத்திலும் சரி, இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக கூறி வந்தார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டு என்னுடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறை மீதும், அமலாக்கத்துறை அதிகாரி மீதும் தொடரப்பட்ட வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைப்பதா அல்லது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பதா என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"மோடிக்கு எங்கு போனாலும் என் ஞாபகம் தான்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details