தமிழ்நாடு

tamil nadu

கொல்லிமலை வல்வில் ஓரி விழா ரத்து: 15 அமைப்புகளுக்கு அனுமதி

By

Published : Jul 20, 2021, 8:07 PM IST

கொல்லிமலை வல்வில் ஓரி விழா ரத்து

கரோனா பொதுமுடக்கத்தால் ஆடிப் பெருக்கையொட்டி கொண்டாடப்படும் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிகழாண்டில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் 15 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நாமக்கல்:தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழவும், பிரசித்திப் பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்குச் செல்லவும் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பிற மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா எடுக்கப்படும். அதனை முன்னிட்டு அலுவலர்கள், பல்வேறு அமைப்பினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பர்.

மேலும் ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். மேலும் அங்குள்ள கலையரங்கில் பல்துறை விளக்கக் கண்காட்சிகள், தோட்டக்கலைத் துறையின் மலர் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சமூகநலத் துறை சார்பில் பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

ஆண்டுதோறும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிகழாண்டில் கரோனா தொற்று பரவலால் தடைசெய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை வல்வில் ஓரி விழா ரத்து

சுற்றுலாப் பயணிகள், வெளி மாவட்டத்தினர் கொல்லிமலை வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் 15 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு அமைப்பிலும் நான்கு பேர் வீதம், இரண்டு மணி நேர இடைவெளியில் மலைப் பகுதிக்குச் சென்றுவர அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:ஊரடங்கிலும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியுடன் டியூஷன்: கிராம இளைஞர்களின் கல்விச் சேவை

ABOUT THE AUTHOR

...view details