மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சிவபிரியா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் 5 ஏக்கர் புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்துவந்ததோடு, சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கார்த்திக், அவரது சித்தப்பா மகன் கண்ணன், கண்ணனின் மனைவி மணிமேகலை, வாசு ஆகியோர்களுக்கிடையே ஏற்கனவே சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த பிரச்னையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கண்ணன் தரப்பினர் கர்ப்பிணியாக இருந்த சிவப்பிரியாவை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவப்பிரியா புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜன.7ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் சிவப்பிரியாவுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ஜன. 7ஆம் தேதி கார்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கார்த்திக்கின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்த சிவபிரியாவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், கணவரின் லாரி, இருசக்கர வாகனம் ஆகியன காணாமல் போயிருந்தன. இதுதொடர்பாக தனது கணவரை கண்ணன் தரப்பினர் கொலை செய்து, அதனை தற்கொலை என்று மாற்றி, அடக்கம் செய்துவிட்டதாகவும், தனது உடைமைகளை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜன. 11ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவபிரியா புகார் அளித்திருந்தார்.
ஆட்சியரிடம் மனு அளித்த பெண் இந்நிலையில், சிவபிரியா தனது குழந்தைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதாவிடம் மீண்டும் இன்று (ஜன.21) புகார் மனு அளித்தார். அம்மனுவில், தனது கணவரின் உறவினர்கள் கணவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காமல், தன்னையும், தன் குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க:குடிபோதையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது