மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டியபோது, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழமை வாய்ந்த இந்த பொருட்களை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று (அக்.10) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜகணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சீர்காழி தமிழ்ச் சங்கம் திருக்கோயில் திருமணங்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், தருமபுரம் ஆதீன பொது மேலாளர், சீர்காழி சட்டநாதர் கோயில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேசினர்.
அப்போது, புனித சிலைகள் மற்றும் செப்பேடுகளை அரசு கையகப்படுத்தக் கூடாது என்றும், இவை அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் கிடைத்த காரணத்தால், கோயிலுக்குள்ளேயே பாதுகாப்பு பெட்டகம் வைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கும், சீர்காழி வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கு உண்டான செலவுத் தொகையை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், “சட்டநாதர் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அனைவரும் செப்பேடுகளை பார்த்துச் செல்கின்றனர். இதனால் கோயிலின் தொன்மையும், பழம்பெருமையும் உலகறிந்து கொண்டிருக்கிறது. இந்த சிலையையும், செப்பேடுகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், சீர்காழியில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி போராடத் தயாராக இருக்கிறோம்” என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கோயில் அருகில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் கோயிலுக்கு வழங்கிய ஆவணங்களை பொதுமக்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:அறிவுக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு மிக அவசியம் - உலக மனநல நாளில் வலியுறுத்தல்..