விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என அரசுக்கு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை மயிலாடுதுறை: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 12ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ஏற்று, 2022இல் பெருமழையால் பேரழிவைச் சந்தித்த சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களை பேரிடர் பாதித்த தாலுகாக்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்,
கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்கள் பேரழிவைச் சந்தித்தது. இந்தப் பேரழிவை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பேரிடர் மேலாண்மை மூலம் இடுபொருள் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். காப்பீடு நிறுவனத்தின் மூலம் இடுபொருள் இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு உண்டான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது வரை 50 சதவீத விவசாயிகளுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களை பேரிடர் பாதித்த தாலுகாக்களாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் போராடினோம். அதனை தமிழ்நாடு அரசு மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், அப்பொழுதே சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களை பேரிடர் பாதித்த தாலுகாக்களாக அறிவிக்க வேண்டும் என அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தினுடைய நகலை எங்களிடம் அளித்திருந்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நிதி இதுவரையில் விவசாயிகளிடம் சென்றடையவில்லை எனவும், உற்பத்திக்கு பெற்ற கடனை செலுத்தச் சொல்லி கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள் விவசாயிகளிடம் வலுக்கட்டாயம் செய்து செலுத்தச் சொல்லி வருகின்றனர்.
தற்போது சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கடன்களை பெற முடியாத சூழல் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்ய முடியாத விவசாயிகளிடம் நிர்பந்தம் செய்து கடனை செலுத்தச் சொல்லி வங்கிகள் வற்புறுத்தி வருகின்றன.
உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களை பேரிடர் பாதித்த தாலுகாக்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தது.
அதுவரையில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களது கடன்களை வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது. ஆனால், 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உத்தரவை இதுவரையில் தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை. அதனை செயல்படுத்தவும் இல்லை. அதேநேரம், அதனை மூடி மறைக்க முயற்சிக்கிறது.
உடனடியாக உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கின்ற பேரிடர் மேலாண்மை நிதியாக இருந்தாலும், காப்பீட்டு நிறுவன நிதியாக இருந்தாலும் விவசாயிகளுக்குச் சென்று அடைந்துள்ளதா என்பதை அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 1ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளிடம் கடை வீதியில் 24 மணி நேர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர் பொன்முடி... பூமி பூஜையில் காலணியுடன் பங்கேற்றதால் பரபரப்பு!