மயிலாடுதுறைமாவட்டம் அருகே நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த 25ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி விஏஓ குமாரவேல் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நீடுர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, இறந்து கிடந்த இளம்பெண், ஆண் ஒருவருடன் செல்வது தெரியவந்தது. அதனடிப்படையில் கேமரா பதிவில் இருந்த நீடூர் பி.எம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் மகன் ஐயப்பன்(27) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.