தமிழ்நாடு

tamil nadu

4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து திறக்க விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Nov 19, 2020, 11:04 PM IST

மயிலாடுதுறை அருகே நான்கு ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடிக்கிடப்பதால் ஆலையில் பணியாற்றும் 129 ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர். லாபத்தில் இயங்கிய ஆலையை நஷ்டத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஆலையை மீண்டும் புனரமைப்பு செய்து திறக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

cooperative sugar mill
cooperative sugar mill

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில், அரசு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சர்க்கரை ஆலை மூடிக்கிடக்கிறது. இந்த ஆலையை புனரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சங்க இயக்குநர், மற்றும் கரும்பு விவசாய சங்க பொறுப்பாளர் காசிநாதன் கூறியதாவது, ''முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஆல், 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

சுமார் 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, 1993ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இந்நிலையில், 1994ஆம் ஆண்டு ரூபாய் 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது கமிஷன் பெறுவதற்காக, தகுதியில்லாத கம்பெனிக்கு ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். இதனால் சர்க்கரை ஆலை தொடங்கியதிலிருந்து, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு பின்பு ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவையை தந்தது.

இதனால் ஒரு டன்னுக்கு 38 கிலோ இழப்பீடு ஏற்பட்டு, ஒரு ஆண்டில் மட்டும் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வந்ததுமட்டுமல்லாமல், தரமற்ற விரிவாக்கப் பணியால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தது.

இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அளித்த கரும்பிற்கு உண்டான தொகையை பெறமுடியாமல் வாழ்வாதாரம் இழந்து முடங்கியதால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், 2015ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார். ஆனால், அவரது மறைவிற்குப் பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழ்நாடு அரசு இதுநாள் வரை வழங்கவில்லை.

தொடர் நஷ்டம் காரணமாக 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை 3.75 கோடி ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது.

தற்பொழுது ஆலையில் பணிபுரியும் 129 ஊழியர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் முதல் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஆலையை இயக்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அளிக்க நடவடிக்கை எடுக்காத தொழில் துறை மற்றும் தலைமைச் செயலாளர் மீது கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தோம். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சம்பள நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்!

ABOUT THE AUTHOR

...view details