தமிழ்நாடு

tamil nadu

கடைமடைப் பகுதியான திருவாலங்காடு வந்தடைந்த காவிரி நீர்; விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Jun 1, 2022, 2:10 PM IST

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட 800கனஅடி காவிரி நீர், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு வந்தடைந்த நிலையில் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி நீர்
காவிரி நீர்

மயிலாடுதுறை: கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. இந்தக் காவிரி ஆற்று நீரை சேமித்துவைக்கும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு வந்தடைந்த காவிரி நீர் திறப்பு

இந்த காவிரி நீரானது டெல்டா மாவட்டமான, தஞ்சை மாவட்ட கல்லணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து 27ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் விதிகளின்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணைப் பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன்படி, இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காகப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: தொடர்மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; ஆனந்தக் குளியல் போடும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details