தமிழ்நாடு

tamil nadu

பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 - ஆதாரங்களை அடுக்கும் தமிழ்ப் பேராசிரியர்

By

Published : Sep 11, 2021, 11:01 AM IST

பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 12

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் குறித்த முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டும் என கால் நூற்றாண்டாகப் போராடிவரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மகாகவி பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11-க்குப் பதிலாக செப்டம்பர் 12இல் அனுசரிக்கப்பட வேண்டும் என பாரதியின் இறப்பு ஆவணங்களுடன் கால் நூற்றாண்டாகப் போராடிவரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர், அவரின் நூற்றாண்டு விழாவிலாவது வரலாற்றுப் பிழை திருத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

தனது இறுதிக் காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த பாரதியார் 39ஆவது வயதில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியின் பிந்தைய நள்ளிரவு 1.30 (அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி) மணிக்கு மேல் இறந்துள்ளார்.

பாரதியின் நினைவு நாள் செப். 12

அதனால் அடுத்த நாள்தான் கணக்கில் வரும் என்பதால் செப்டம்பர் 12ஆம் தேதி பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு அவரது உறவினர்கள் சரியான முறையில் அவரது இறப்பைப் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சுவழக்கிலும் பாரதியார் செப்டம்பர் 11ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. ஆனால் சென்னை மாநகராட்சியில் உள்ள பதிவேடு செப்டம்பர் 12ஆம் தேதி பாரதியார் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

இது குறித்து பாரதி ஆய்வாளரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முனைவர் சுப்புரெத்தினம், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என அதிகாரப்பூர்வமான தேதியை மாற்ற வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறார்.

செவிசாய்த்த ஜெயலலிதா

இவரது முயற்சியின் பயனாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்ல மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டில் பாரதியார் இறந்தநாள் செப்டம்பர் 12 என 2014ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசின் அரசிதழிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 12 என அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகளால் செப்டம்பர் 11ஆம் தேதியே பாரதியாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் நாள்காட்டிகளிலும், பாடக்குறிப்புகளிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முரண்பாடு அதிகாரப்பூர்வமாகக் களையப்பட வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்திவருகிறார்.

இதையும் படிங்க:பாரதி நினைவு நாள்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details