தமிழ்நாடு

tamil nadu

'பாரத் பந்த்': டெல்டா மாவட்டங்களில் முழுக் கடையடைப்பு..!

By

Published : Dec 8, 2020, 1:05 PM IST

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று நடைபெறும் ’பாரத் பந்த்’ தையொட்டி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டம் பாரத் பந்த்  பாரத் பந்த்  Delta District Bharat Bandh  Bharat Bandh  டெல்டா மாவட்டம் முழுக் கடையடைப்பு  All Shops Closure In Delta Districts
Delta District Bharat Bandh

வேளாண் திருத்தச்சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளதாக குற்றம் சாட்டி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று (டிச.08) இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாததால் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு பேருந்துகள் சொற்பமான பயணிகளுடன் இயங்குகின்றது.

நாகை மாவட்டத்தில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இரண்டாயிரத்து 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், நாகை, நாகூர், உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், மதர்சார்பாற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நாகை மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளது. இருப்பினும் நாகையில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

சாலை மறியலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நீதிமன்றம் முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் சாலை மறியலிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க கோரியும் அவர்களைப் பாதுகாக்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி பேருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் இன்று ஒருநாள் நீதிமன்றத்தில் வழக்காடாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுக்கோட்டை உழவர் சந்தையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டு ஏர் கலப்பையுடன் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வாழ்வுரிமைக் கட்சியினர்

இதைத் தொடர்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும், மக்கள் அதிகாரம், தொழிலாளர் முன்னேற்ற கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனால், இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் பொது கடையடைப்பு காரணமாக திருச்சியில் அரசு, தனியார் பேருந்துகள், கார், ஆட்டோ, ரயில் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்தும் தங்குதடையின்றி இயங்கியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவல் துறை

வர்த்தக நிறுவனங்களும், வியாபார நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்பட்டன. அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் இன்று காலை திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. பொது வேலை நிறுத்தம் காரணமாக திருச்சியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரத் பந்த் - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details