தமிழ்நாடு

tamil nadu

‘கீழடிக்காக மத்திய அரசிடம் உதவி கேட்பது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கு’

By

Published : Oct 7, 2019, 7:45 PM IST

மதுரை: கீழடி ஆறாம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசிடம் உதவி கேட்பது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

thirumuragan-gandhi keezhadi

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிடுவதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கீழடிக்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கீழடி அகழாய்வில் ஈடுபட்டுவரும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அதற்கான அறிக்கையை உடனடியாகப் பெற வேண்டும்.

மத்திய பாஜக அரசின் பிடியில் உள்ள இந்திய தொல்லியல் துறை, கீழடியில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு ஆரிய சாயல் பூசுவதற்கு தொடர்ந்துமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்து மத அடையாளச் சின்னங்கள் கீழடியில் கிடைத்திருப்பதாகவும் பல்வேறு பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு

தொல்லியல் ஆய்வறிஞர்கள் அஸ்கோ பர்போலா மற்றும் நொபுரு கராஷிமா போன்றவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று அறிவித்தனர். திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் நாகரிகம் என்பதும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்.

கீழடி அகழாய்வு களத்தில் கள அருங்காட்சியகம் அமைப்பதற்கும் ஆறாம் கட்டமாக அகழாய்வு தொடங்குவதற்கும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உதவியை கோரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு மத்திய அரசிடம் உதவிகேட்பது தமிழர்களின் தன்மானத்திற்கு இழுக்கானது. கீழடி அகழாய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான நிதி பலம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் தமிழ்நாடு மக்களிடம் அதற்குரிய நிதியைப் பெறலாம். எக்காரணத்தைக் கொண்டும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உதவி பெறக்கூடாது.

திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு

முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதேபோல் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழடி தமிழர் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details