தமிழ்நாடு

tamil nadu

அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு: உத்தரவை கடைபிடிக்காத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 2:01 PM IST

Madras high court madurai bench:அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைப்படி விலைப்பட்டியல் வைக்கப்படாத கடைகளின் ஊழியர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு: உத்தரவை கடைபிடிக்காத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை!
அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு: உத்தரவை கடைபிடிக்காத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை!

மதுரை:அரசு டாஸ்மார்க் மதுபான கடைகளில் முறைப்படி விலைப்பட்டியல் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், அதனை கடைப்பிடிக்காத கடை ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. மேலும், 21 வயதுக்கு கீழ் உள்ள எதிர்கால இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மது சமுதாயத்தையே சீரழித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் கொண்ட அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்தினர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

பொது நலன் கருதி, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களைத் தடுக்க, மதுபான விற்பனை நேரத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தலாம். மது குறித்து பொதுமக்கள் மற்றும் மது அருந்துவோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீதான வழக்குப் பதிவு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: மருத்துவ படிப்புகளுக்கு பி.யு.சி. தகுதியில்லையா? பி.யு.சி. படித்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!

மது அருந்துவது சமூகத்துக்குக் கேடானது. இது மது அருந்துபவரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளோரையும் பாதிப்படையச் செய்கிறது. எனவே, இதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் நிர்வாக முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தெரியும். ஆனால், பொது நலன் கருதி சில வழிகாட்டுதல் அறிவுரைகளை வழங்குகிறோம்.

மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மதுப்புட்டிகளில் அடையாள வில்லை (லேபிள்), விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் முதலானவற்றைத் தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மேலும், தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவிக்க வேண்டும்”, என நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியலை வெளியே தெரியும்படி வைப்பது, மதுபானம் வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதிகள், “டாஸ்மாக் கடை வெளியே மதுபானங்களின் விலைப் பட்டியல் உள்ளதா என்பது குறித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் குழு நாளை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு விலைப் பட்டியல் இல்லாத டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24ஆம் தேதி) உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”, என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: "அரசு மருத்துவமனைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி!

ABOUT THE AUTHOR

...view details