மதுரை: இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து பெருமை சேர்த்த வந்தனா கட்டாரியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியை பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர உழைத்த பெண்களில் ஒருவருக்கு இங்கு கிடைத்த வெகுமதி சாதிரீதியான இழிவு.
வந்தனா கட்டாரியா – இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை. தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பெண். காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெறுவதற்கு வழி வகுத்த ஆட்டம் அது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற பட்டியலின பெண்கள் இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம்.
குடும்பத்தை விட நாடு முக்கியம் என்று நினைத்து பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தை விட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்?