தமிழ்நாடு

tamil nadu

பீகாரைச் சேர்ந்த யூடியூபர் கைது வழக்கு: உள்துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Aug 11, 2023, 2:50 PM IST

பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தொடர்பான விசாரணையில் உள்துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை:பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணிஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணிஷ் காஷ்யப் அவரின் "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் தமிழ் நாட்டு மக்களால் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், இதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற வகையிலும் குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்தார்.

இந்தச் செய்தி பரவலானதை அடுத்து அதுபோல் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும், தவறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்குத் தொடர தமிழகக் காவல் துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான தகவல் பீகார் காவல்துறைக்கு வழங்கப்பட்ட நிலையில் அம்மாநில காவல்துறை கடந்த மார்ச் 30ஆம் தேதி அவரை கைது செய்து தொடர்ந்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது ஐந்து நாட்கள் கழித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாகச் சிறைத் தண்டனையில் உள்ள அவரை விடுவிக்கக்கோரியும், எவ்வித ஆவணங்களும் இன்றி தனது சகோதரர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்; அந்த வழக்கை அவர் மீது இருந்து ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்து மணிஷ் காஷ்யப்பின் சகோதரர் திரிபுவன் குமார் திவாரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மணிஷ் காஷ்யப்பின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கு குறித்துப் பதிலளித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மத்திய அரசு தமிழ்நாட்டை குறி வைப்பது ஏன்?-அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details