மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கும், வேல்முருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கர்ப்பிணியான எனக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு மே 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து எனக்கு பெண் குழந்தை பெற்றெடுத்தேன். ஆனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு செயற்கை மூச்சுக் கருவி (வெண்டிலேட்டர்) இல்லாததால், நானும் குழந்தையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மே 18இல் அனுமதிக்கப்பட்டோம். மருத்துவக் குழுவினர் முறையாக சிகிச்சை அளித்தும், குழந்தை மே 20 அன்று உயிரிழந்தது.
மருத்துவர்கள் அலட்சியம் மற்றும் அலைக்கழிப்பு காரணமாக எனது குழந்தை உயிரிழந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்துள்ளது. அதை மறைப்பதற்காக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சிகிச்சை என்ற பெயரில் ஜோதியையும், அக்குழந்தையையும் அலைக்கழிப்பு செய்துள்ளனர். பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை முறையை கையாண்டிருந்தால் குழந்தை உயிர் பிழைத்திருக்கும். மேலும், குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் பரிசோதனை குறித்த குறிப்புகளை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தர மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, முதுகுளத்தூர், பரமக்குடி, மதுரை என மூன்று இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் குழந்தையானது அறுவை சிகிச்சையின்றி இயற்கையாக பிறந்துள்ளதாக மருத்துவர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சுகாதார துறை இணை இயக்குநர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்கல் செய்த அறிக்கையில் மருத்துவர்கள் கவனக் குறைவு காரணமாக பச்சிளம் குழந்தை இறக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவர்கள் மீது தவறு என கூற முடியாது. பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு 1000க்கு 26.619 ஆக உள்ளது. தேசிய சுகாதார அமைப்பு மூச்சுத் திணறல் காரணமாக 9.9% பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மனுதாரர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட குறிப்புகளை கேட்டதை தர மறுத்தது தவறு. தற்போது அந்த மருத்துவ குறிப்புகள் காணாமல் போய் விட்டதாகவும், அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் சுகாதார துறையினர் கூறுவதை நீதிமன்றம் ஏற்று கொள்ள முடியாது.