தமிழ்நாடு

tamil nadu

மாவட்ட கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை.. உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டதன் காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:47 PM IST

Imprisonment for District Education Officer: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மாவட்ட கல்வி அதிகாரியின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

District Education Officer in contempt of court case High Court Madurai branch sentenced to imprisonment
மாவட்ட கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதன்படி, தான் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், தனது பணியை வரன்முறை செய்து தனக்கு வர வேண்டிய பண பலன்களையும், பதவி உயர்வுகளையும் முறையாக வழங்க உத்தரவிடக் கோரி கடந்த 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகள் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரர் கோரிக்கையின்படி பணி வரன்முறை செய்து உரிய பண பலன்களையும் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை தரப்பில் 2020ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த அந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து மூன்று வருடங்களாகியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வித்துறை அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி ஜான்சி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது இரண்டரை ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து பதில் அளிக்க மாவட்ட கல்வி அதிகாரி DEO லச்சுமன சாமி (ஓய்வு) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனையடுத்து, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமண சாமி நேரில் ஆஜரானார்.

அவர் தரப்பின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பார்த்த நீதிபதி, இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை, தற்போது நிறைவேற்றி உள்ளதாக கூறுகிற காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மாவட்ட கல்வி அதிகாரி நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இதன் மூலம் மாவட்ட கல்வி அதிகாரி நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு தண்டனைக்கு உள்ளாகிறார் என நீதிபதி தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வார சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது எனவும், இந்த தண்டனையை நீதிமன்ற பதிவாளர் நிறைவேற்றுவார் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார். மேலும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மாவட்ட கல்வி அதிகாரியின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details