தமிழ்நாடு

tamil nadu

குட்லாடம்பட்டி அருவி சீரமைப்பு வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Sep 22, 2020, 4:18 AM IST

மதுரை: குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

மதுரை, உத்தங்குடி பகுதியை சேர்ந்த சக்கரை முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், " மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பகுதியில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. இங்கு அப்பகுதி மக்கள் மட்டும் செல்லக் கூடிய இடமாக இருந்தது.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள், பெண்கள் குளிப்பதற்காக அருவியின் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதிலிருந்து குட்லாடம்பட்டி அருவிக்கு குளிப்பதற்காக பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வர தொடங்கினர்.

குட்லாடம்பட்டி அருவியில் மழை காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2018ஆம் கஜா புயலின் காரணமாக குட்லாடம்பட்டி அருவி பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதித்தனர்.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக குட்லாடம்பட்டி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் குட்லாடம்பட்டி அருவிக்கு சென்று பார்த்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்பு சேதமடைந்த இடம் தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அலுவலர்கள் பலருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் உடனடியாக சேதமடைந்த அருவி பகுதியை உடனடியாக சரி செய்ய உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details