தமிழ்நாடு

tamil nadu

"மணல் கடத்தல் புகாரளிப்பவர்களை மிரட்டுவது தீவிரமான குற்றச் செயல்" - நீதிபதிகள் எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 10:16 PM IST

Sand Smuggling case: சிட்டிலரை ஏரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, "திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சிட்டிலரை ஏரியில் இருந்து, இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தாது மணல் மற்றும் செம்மண் ஆகியவற்றை 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கடத்துகின்றனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பாலகுமார் மற்றும் டெல்லிகுமார் ஆகியோர், தாதுமணல் மற்றும் செம்மண் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக கடத்தி ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டை சேதப்படுத்தினர். தொடர்ந்து புகாரளித்த என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதோடு, தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அரசுக்கு சொந்தமான ஏரியில் இருந்து சட்டவிரோதமாக தாதுமணல், செம்மண் ஆகியவற்றை டிப்பர் லாரிகளில் கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களை மிரட்டுவதும், வீடுகள் சேதப்படுத்தப்படுவதும் மிக தீவிரமான குற்ற செயலாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மணல் கடத்தல் புகார் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீதான சொத்து வழக்கு அக்.19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details