தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதாவுக்கு நடந்த கொடூரம்.. தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள்.. - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

By

Published : Aug 13, 2023, 11:09 PM IST

Updated : Aug 14, 2023, 12:04 PM IST

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொன்விழா மாநாட்டையொட்டி, அதன் பணிகளை இன்று ஆய்வு செய்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

1989, மார்.29: தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள் - எடப்பாடி பழனிசாமி
1989, மார்.29: தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பேட்டி

மதுரை: 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்றத்தில் கருணாநிதி முன்னிலையில் பெண் என்றும் பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக அக்கட்சியின் பொன்விழா மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நடைபெறுகிறது. அந்தத் திடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன். மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகளின் மேற்பார்வையில், இந்த மாநாட்டின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்" என்றார்.

நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு பல்டி அடிக்கிறார்கள்" என்றார்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நடைபெற்றச் சம்பவம் குறித்து முதலமைச்சரின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "1989 இல் நடைபெற்ற சம்பவம் தற்போது தான் இன்றைய பொம்மை முதலமைச்சருக்கு ஞாபகம் வந்து, அதை அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவே மக்கள் பார்க்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார்.

அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசினார். அவர் மக்களவையில் கூறிய சம்பவத்தில் நானும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன். அந்த அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர், எதிர்க்கட்சியின் தலைவரை பெண்ணென்றும் பாராமல், ஜெயலலிதா மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் கண்ணெதிரே ஒரு பெண் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்கினர். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய போது மீண்டும் முதலமைச்சராக தான் இங்கு வருவேன் என்று சபதம் எடுத்து அதை நிறைவேற்றினார் ஜெயலலிதா. இன்றைய தினம் முதலமைச்சர் பொய்யான செய்தியை சொல்கிறார்.

சட்ட பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதற்கு ஜெயலலிதா பதிலளிக்க முற்பட்ட போது தான், இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாகத் தாக்கினர்.

சட்டப்பேரவையின் கருப்பு தினமாக அந்த நாளை பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் அதுவும் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு இப்படி எங்கும் நடைபெற்றது இல்லை. ஆனால் முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்" என்றார்.

மேலும் அவர், "காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் திமுகவினர் குரல் எழுப்பினார்களா?. 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பாசன விவசாயிகள் உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அளவுக்கு அதிமுக செயல்பட்டது. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள்?" என்று செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

தேவர் கூட்டமைப்பு மாநாட்டை புறக்கணித்தது குறித்த கேள்விக்கு, "சமூக நீதியை காப்பதே அதிமுக தான் என்றார். மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக உள்ளதா என்ற கேள்விக்கு, நீங்களே பதில் சொல்லி விட்டீர்கள்" என்றார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா என்கிற பெயர் மக்களுக்கானது. அதை வைத்து விட்டார்கள் அதுவே தவறு. பெங்களூர் மாநாட்டில் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு வேண்டுமென்றால், எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார்.

கண்டிஷன் போட்டு தான் கூட்டணியில் இணைந்தார். கெஜ்ரிவாலுக்கு அந்த துணிச்சல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் கெஜ்ரிவாலை போல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால், இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்வர் அறிவிப்பு கொடுத்திருந்தால் தண்ணீர் வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் நீர்வளத் துறை அமைச்சரை முதல்வர் சந்தித்தார். அப்போதாவது இது சம்பந்தமாக பேசி இருக்கலாம்" என்றார். நாங்குநேரி விவகாரம் குறித்த கேள்விக்கு, "ஜாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும். இப்படியான செய்திகளே தொடர்ந்து வருகிறது" என ஆளும் திமுக அரசை வன்மையாக சாடினார்.

இதையும் படிங்க:சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?

Last Updated : Aug 14, 2023, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details