தமிழ்நாடு

tamil nadu

75ஆவது சுதந்திர தினம்- மதுரை மக்களுடன் ஓர் சந்திப்பு!

By

Published : Aug 15, 2021, 5:44 PM IST

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் மதுரை மக்களுடன் ஓர் சந்திப்பு.

people of Madurai
people of Madurai

மதுரை: இந்திய திருநாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பல்வேறு வகையிலும் போராடி காந்தி என்ற ஒற்றை மனிதனின் தலைமையின் கீழ் மகத்தான விடுதலை பெற்றது.

விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் முழு பயன் இந்திய மக்களை சென்றடைந்து இருக்கிறதா? இன்னும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் ஈடிவி பாரத் கருத்துக் கேட்டிருந்தது.

பள்ளி மாணவி கருத்து

இது குறித்து 12ஆம் வகுப்பு மாணவி தங்க மீனாட்சி கூறுகையில், “முழுவதும் நகைகள் அணிந்து இரவு நேரத்தில் ஒரு பெண் என்றைக்கு பயமின்றி நடமாடுகிறாளோ அப்போதுதான் இந்தியா முழு சுதந்திரம் பெற்றதாக நான் உணர்வேன் என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். ஆனால் அந்த நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

பெண்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருப்பது பெருமை அளிக்கிறது” என்கிறார்.
காந்தி கனவு- பொருளாதார சமநிலை
காந்தி ஸ்மரக் நிதியில் பணியாற்றும் குமரன் கூறுகையில், “காந்தியின் கனவு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதுதான். ஏழையிலும் ஏழையாக இருப்பவர்களின் பொருளாதார முன்னேற்றம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும்.

ஆனால் அந்த வகையில் இந்தியாவைப் பொருத்தவரை ஏழைகள் இப்போதும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். பணக்காரர்கள் தான் மேலும் மேலும் பணக்காரர் ஆகி கொண்டிருக்கிறார்கள், இந்த நிலை மாறி பொருளாதார சமத்துவம் இங்கு உருவாக வேண்டும்” என்கிறார்.

சமூக ஆர்வலர் கருத்து
சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தான் அடித்தட்டு ஏழை மக்கள் உள்ளனர். தங்களின் தேவைகளுக்காக அரசு அலுவலர்களை சந்திக்கின்ற யாருக்கும் நல்ல விதமான பதில் முறையாக கிடைப்பதில்லை என்பதுதான் மிகப்பெரும் அவல நிலை.

75ஆவது சுதந்திர தினம்- மதுரை மக்களுடன் ஓர் சந்திப்பு!

இங்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்ற நிலைதான் இப்போதும் உள்ளது. இந்திய நாட்டின் சுதந்திர தினம் என்பது அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு அவ்வாறு இல்லை என்பதே யதார்த்தம்” என்றார்.

வேலைவாய்ப்பின்மை
பூக்கடை நடத்தும் ஆனந்தம் என்ற பெண் கூறுகையில், “எங்கள் குழந்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். ஆனால் படிப்புக்கு சம்பந்தமில்லாத ஜவுளிக் கடையில் சென்று வேலை பார்க்கிறார்கள். சுதந்திர தினம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. அரசாங்கம் எங்களுக்கு ஏதேனும் நல்லது செய்தால் அது போதும்” என்கிறார்.

தொழில் உத்தரவாதம்
பெரிய மாரியம்மாள் என்ற பெண் கூறுகையில், “நல்லது செய்வார்கள் என்று தான் இந்த ஜனநாயக நாட்டில் நாங்கள் வாக்களிக்கிறோம், ஆனால் எவர் வந்தாலும் எங்களது நிலை மாறுவதற்கு இல்லை. எங்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய தொழிலுக்கே உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

இங்கு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்க முடியாத ஜனநாயகம் அற்ற நிலை உள்ளது. இங்கு உள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் ஒருமுறையும் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க : 'அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று அதிகாரிகள்' - தியாகி பரமசிவம் பிள்ளை வேதனை

ABOUT THE AUTHOR

...view details