ETV Bharat / state

'அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று அதிகாரிகள்' - தியாகி பரமசிவம் பிள்ளை வேதனை

author img

By

Published : Aug 15, 2021, 11:54 AM IST

Updated : Aug 15, 2021, 3:24 PM IST

பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்டியடித்தாலும்கூட, அன்றைக்கு இருந்த அதே போன்ற அதிகாரிகள்தான் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மாற வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் தற்போதுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளில் மூத்தவரான 93 வயது ரா. பரமசிவம் பிள்ளை சிறப்பு பேட்டியளித்தார்.

Paramasivam Pillai
Paramasivam Pillai

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வசித்து வருபவர் தியாகி பரமசிவம்பிள்ளை. வைத்தியநாதய்யர், என்எம்ஆர் சுப்பராமன், ஐ.மாயாண்டி பாரதி, போன்ற மதுரையின் முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களோடு இணைந்து வந்தே மாதரம், வெள்ளையனே வெளியேறு, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

தற்போது இரண்டு மகன், இரண்டு மகள், 10 பேரன்-பேத்திகள், 6 கொள்ளுப் பேரன்-பேத்திகளோடு வாழ்ந்து வருகிறார். மதுரையில் தற்போதுள்ள தியாகிகளில் வயதில் மூத்தவர் தியாகி பரமசிவம்பிள்ளை. ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தியாகி பரமசிவம் பிள்ளை சிறப்பு நேர்காணல் அளித்தார்.

பரமசிவம் பிள்ளை சிறப்பு பேட்டி

அப்போது பேசிய அவர், “நாங்கள் முன்னர் மதுரை மேற்குத் தாலுகா நாகமலை அருகேயுள்ள வடபழஞ்சியில்தான் வசித்தோம். கடந்த 1945ஆம் ஆண்டு எங்கள் வீட்டை சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத்தி விட்டனர். அதில் என் பெற்றோர், பக்கத்து வீட்டு பாட்டி கருகி இறந்ததோடு ஆடு, மாடுகள், மாட்டு வண்டி என மொத்தமும் எரிந்து விட்டன. அந்த நிலத்தை மீட்பதற்கு இன்று வரை போராடி வருகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டேன். தீவிரமான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டேன். அப்போது ஆங்கிலேய அதிகாரிகளால் பாதிக்கப்பட்டதைப் போன்றே தற்போதும் விடுதலை பெற்ற இந்தியாவில் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். வந்தே மாதரம், வெள்ளையனே வெளியேறு, தேசபக்தர்களை விடுதலை செய், கலெக்டர் என்ன கடவுளா..? கான்ஸ்டபிள் என்ன எமனா..? உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன்.

ஆங்கிலேய மனநிலையில் அதிகாரிகள்
இதனால் தொடர்ச்சியாக ஆறு மாதங்களில் சிறையிலிருந்துள்ளேன். மேலும் அவ்வப்போது நடைபெற்று வந்த போராட்டங்களில் சிறைப்படுவேன். பிறகு விடுதலையாவேன். இந்தியா விடுதலை பெறும்போது நாங்களெல்லாம் சிறையில்தான் இருந்தோம். அதற்குப் பிறகு விடுதலையாகி வெளியே வரும்போது, அவரவர்க்கு கிடைத்த தொழில்களை செய்து பிழைத்தோம்.
ஆங்கிலேய ஆட்சியின்போது அரசு அதிகாரிகள் என்ன மனநிலையில் இயங்கினார்களோ, அதேபோன்ற மனநிலையில்தான் தற்போதுள்ள ஆட்சியாளர்களும் உள்ளனர். அலுவல் தொடர்பான சாதாரண கோரிக்கைக்கு சென்றால்கூட அலைக்கழிப்புச் செய்கிறார்கள். லஞ்சம் இல்லாமல் இங்கு எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. பாடுபட்டு வாங்கித் தந்த இந்திய சுதந்திரம், இன்றும் நேர்மையற்ற அதிகாரிகளால் அவமானப்பட்டுக் கிடக்கிறது. இந்த ஆட்சியாளர்களுக்கு தண்டனையை கடவுள்தான் தர வேண்டும்.

வாழ்க்கை போராட்டம்
எனக்குப் பென்ஷன் பெறுவதற்காக நீண்ட நெடுங்காலமாகப் போராடி கடந்த 2014ஆம் ஆண்டுதான் பெற்றேன். அதுவரை அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்களால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டேன். அன்றைக்குப் ரூ.10 ஆயிரம். தற்போது ரூ.17 ஆயிரம் பெறுகிறேன். 1966ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ரூ.50தான் பென்ஷன் தொகை.

'அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று அதிகாரிகள்' - தியாகி பரமசிவம் பிள்ளை வேதனை

அப்போது நாளன்றுக்கு ரூ.1.50 கூலியாகப் பெற்று பணி செய்தேன். அப்போது அது பெரிய தொகை. உணவு விடுதிகளில் மாவாட்டும் தொழில் செய்தேன். ஒரு படிக்கு நாலணா தருவார்கள். நாள்தோறும் 80 படி ஆட்டுவேன். இதனால் ரூ.20 ஊதியமாகப் பெற்றேன். அப்போது இந்தத் தொகை மிகப் பெரிய சம்பளமாகும்.

வேதனை
தற்போதுள்ள ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நியாயமாக வேலை செய்தாலே அனைத்தும் சரியாகிவிடும். பணத்துக்கு ஆசைப்பட்டு நேர்மையின்றி செயல்படுகிறார்கள்.

இதனால் தான் சமூகம் சீர்கெட்டு, பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகிறது. அதிகாரிகளின் செயல்பாடு பொறுப்பு மிக்கதாக இருக்க வேண்டும். இவர்கள் திருந்தி நடக்கும்போதுதான் பொதுமக்கள் நன்றாக இருக்க முடியும்' என்றார்.

இதையும் படிங்க : காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்

Last Updated : Aug 15, 2021, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.