தமிழ்நாடு

tamil nadu

அமரவாதி ஆற்றில் சாயக்கழிவுகள்.. சுற்றுச்சூழல் துறை எடுத்த நடவடிக்கை என்ன? விநாயகர் சதுர்த்தியை தடுக்க ஒருதலைபட்ச செயல் - சிவசேனா அமைப்பினர் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 2:26 PM IST

கரூரில் ரசாயன வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்பட்டதாக வடமாநில தொழிலாளர்களின் குடோனுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகள் கலக்கப்படுவதாக கொடுக்கப்பட்ட புகார்களுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன என்று சிவசேனா கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆர்டர் செய்த விநாயகர் சிலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன் குற்றச்சாட்டு
சிவசேனா கட்சியின் தமிழக செயலாளர் குரு ஐயப்பன்

ஆர்டர் செய்த விநாயகர் சிலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன் குற்றச்சாட்டு

கரூர்:விநாயகர் சதுர்த்திக்காக ஆர்டர் செய்யப்பட்ட சிலைகளை சீல் வைத்து, அதிகாரிகள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் தமிழக செயலாளர் குரு ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.

கரூர் - திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுங்க கேட் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கடந்த நான்கு மாதங்களாக விநாயகர் சிலையை விற்பனைக்காக தயார் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சிலைகள் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் சோதனையில் ஈடுபட்டு 250க்கும் மேற்பட்ட சிலைகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், சோதனை அறிக்கை வந்தவுடன் சிலைகளை விற்பனை செய்யலாம் என்றும் கூறி குடோனுக்கு சீல் வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, நேற்று (செப்.15) விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் வழங்கிய நபர்கள் சீல் வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து குறித்த நேரத்தில் சிலைகள் வழங்கப்பட வேண்டும் என கூறி வட மாநில சிலை தயாரிப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று (செப்.16) ஆம் தேதி கரூர் சுங்க கேட் பகுதியில் சிலை தயாரிக்கும் இடத்தில் தமிழ்நாடு சிவசேனா கட்சி சார்பில் 150 சிலைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சீல் வைக்கப்பட்ட உள்ள இடத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசுபதிபாளையம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐயப்பன், ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "சில பெரியார் இயக்கங்கள், கடவுள் மறுப்பாளர்கள் தூண்டுதலின் பேரில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இடையூறு செய்யும் வகையில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் விநாயகர் திருமேனி தயாரிக்கும் இடத்தை சீல் வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றில் பல்வேறு சாயக்கழிவு நீர் சுகாதார சீர்கேட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து இதுவரை அளிக்கப்பட்ட புகாருக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் எவ்வித ரசாயன கலப்பும் இருப்பதற்கான ஆதாரம் கைப்பற்றப்படாமலே சீல் வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சிவசேனா கட்சி சார்பில் 150 சிலைகள் கரூரில் உள்ள சிலை தயாரிக்கும் இடத்தில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்பட்ட சிலைகளை முடக்கி உள்ளனர்.

இது சம்பந்தமாக இன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தபோது அதிகாரிகள் இல்லை வெளியூர் சென்று விட்டதாக கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளது தொடர்பாக கேட்டதற்கு, ஒவ்வொரு ஆண்டும் அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளை வகுத்து வருகிறது. நீதிமன்றமும் இதில் பல்வேறு வழிகாட்டுதலை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் விநாயகர் திருமேனி தயாரிக்கும் இடத்தை புகார் பெறப்பட்டதாலே சீல் வைப்பது என்பது ஏற்க முடியாது. சிலை தயாரிக்கும் இடத்தில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, என்ன ரசாயனங்கள் கண்டறியப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் சிலைகளை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அவமானப்படக்கூடிய ஒன்று.

சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்டர் செய்த விநாயகர் சிலைகளை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்து அமைப்புகள் இணைந்து அறவழியில் போராட தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:கூகுள் ரிவியூவில் கருத்து பதிவிடுவது அவதூறு பரப்புவதா?.. கருத்து சுதந்திரத்தை கெடுத்துவிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details