தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் அலுவலர் புகார் - எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

By

Published : Oct 24, 2021, 6:19 PM IST

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் அலுவலரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் தாந்தோன்றிமலை காவல்துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூர்: கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில், மறைமுக தேர்தல் நடத்த, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட திட்ட இயக்குநருமான மந்திராச்சலம் கூட்ட அரங்கில் இருந்தார்.

மறைமுக தேர்தல் காலை 10 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் என தேர்தலில் பங்கேற்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது.

150 பேர் கைது

நேரம் மாற்றப்பட்டதற்கான காரணம் கேட்டு அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அறிவிப்பு கொடுத்துவிட்டு தேர்தல் அலுவலர் வாகனத்தில் வெளியேற முற்பட்டார். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், தேர்தல் அலுவலர் மந்திராச்சலம் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் விரைந்தார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின் விடுக்கப்பட்டனர்.

6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்நிலையில் கரூர் தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் தேர்தல் அலுவலர் மந்திராச்சலம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், அதிமுக வழக்கறிஞர்கள் மாரப்பன், சுப்ரமணியன், திருமூர்த்தி, மதுசூதனன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கண்ணதாசன் உள்ளிட்டோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 பேர் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details