ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 பேர் விடுவிப்பு

author img

By

Published : Oct 23, 2021, 9:15 AM IST

கரூரில் ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தி வைப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

எம் ஆர் விஜயபாஸ்கர்  கரூர் செய்திகள்  கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு  எம் ஆர் விஜயபாஸ்கர் கைது  கைது செய்யப்பட்ட அதிமுகவினர் கைது  அதிமுக  ஆர்பாட்டம்  போராட்டம்  அதிமுகவினர் போராட்டம்  ex minister m r vijayabasker release  m r vijayabasker  m r vijayabasker release  karur news  karur latest news  admk  protest
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட தானேஸ் என்கிற முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டதால் தனது எட்டாவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 8ஆவது வார்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் கண்ணையன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 18,762 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

இதனைத்தொடர்ந்து நேற்று (அக்.22) மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஊராட்சி மன்றத்தில் 8 அதிமுக உறுப்பினர்களும், 4 திமுக உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் கூட்டம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தேர்தல் அலுவலரான மந்திராச்சலம் கூறிவிட்டு வாகனத்தில் வெளியேற முற்பட்டார்.

அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், தேர்தல் அலுவலரும், மாவட்ட திட்ட இயக்குநருமான மந்திராச்சலம் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கைதும் விடுவிப்பும்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்தலை தள்ளி வைக்க அதற்கு என்ன காரணம் எனக் கோரி அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு

பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்ய உத்தரவிட்டார்.

உடனடியாக முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 அதிமுகவினரை கைது செய்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு மேல் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 156 அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

காவலர்களின் அராஜகம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், “வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக திடீரென ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்து விட்டு அலுவலகத்தை விட்டு தனது வாகனத்தில் வெளியேற முயற்சித்தார். திமுகவினரின் ஆலோசனைப்படி தேர்தல் அலுவலர் வெளியேறி விட்டு துணைத்தலைவராக திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க முயற்சிகள் நடைபெற்றன.

எனவே தேர்தல் ஒத்திவைப்பு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேட்க முற்பட்ட போது காவல்துறையினர் அராஜகமாக செயல்பட்டதுடன் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். மேலும் என்னுடன் வந்த அதிமுக வழக்கறிஞர்களை அடித்து வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர் தனியார் மண்டபத்தில் தங்க வைப்பதாக அழைத்து சென்று, மண்டபத்தை பூட்டிவிட்டு, மண்தரையில் அமர வைத்தனர். தேர்தல் அலுவலர்களின் வாகனத்தை அடித்து நொறுக்க முற்பட்டதாக PPT Act எனும் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக கூறுகின்றனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுகவின் மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம். நேர்மையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறோம் என்று திமுக அரசு கூறிவிட்டு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

அக்டோபர் 23 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலை நடத்த மனு தாக்கல் செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

இது குறித்து தனியார் மண்டபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவராஜிடம் கேட்டபோது, “மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் இருந்து வெளியேறிய தேர்தல் நடத்தும் அலுவலரை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கைதான அதிமுகவினர் காவல்துறையினரை தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, தொடர்ந்து திடீரென கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு அழைத்து வந்ததால், மண்டபத்தின் சாவி உரிமையாளரிடமிருந்து கிடைப்பதில் காலதாமதமானது.

அதுவரை காத்திருந்த அதிமுகவினர் மண்தரையில் அமர்ந்து கொள்வதா என கேட்டு அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மண்டபத்தின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்க்கு அமர நற்காலிகள் வழங்கப்பட்ட போதும் அமர மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.