தமிழ்நாடு

tamil nadu

Onam Festival : விழாக் கோலம் பூண்ட தோவாளை பூ மார்க்கெட்.. விடிய விடிய குவிந்த பொதுமக்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:50 AM IST

Updated : Aug 28, 2023, 1:51 PM IST

கேரளாவில் நாளை திருவோண பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தோவாளையில் சிறப்பு ஓண பூ சந்தை நள்ளிரவு முதல் தொடங்கி களைகட்டியது.

Thovalai Market Flower sale is high on the Onam festival
தோவாளை பூ மார்க்கெட்டில் விடிய விடிய குவிந்த மக்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் விடிய விடிய குவிந்த மக்கள்

கன்னியாகுமரி: கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை தென் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. ஓணம் ஒரு பாரம்பரிய சிறப்பு மிகுந்த திருவிழா ஆகும். அதாவது மகா பலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழத்திட திருமால் வாமனராக அவதரித்து மகா பலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டார்.

அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்தார். உடனே தன் காலால் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம் மகாபலி சக்கரவர்த்தி வாமனரிடம் ஆண்டு தோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என வரம் கேட்டு உள்ளார். அப்போது அவர் கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், தன் நாட்டு மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையில், சுமார் 10 நாட்களுக்கு அத்த பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஊஞ்சல் ஆடுவது என பல்வேறு விதமான நிகழ்வுகளுடன் மிக சிறப்பான முறையில் ஆண்டு தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.28) ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களின் வசந்த விழா என்று அழைக்கப்படுகின்ற ஓணம் பண்டிகை விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். திருவோண பண்டிகையை நாளை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பண்டிகையின் முக்கிய அம்சமான அத்தப்பூ கோலம் போடுவதற்கு தேவையான பூக்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில் நாளை திருவோண பண்டிகை கொண்டாட தோவாளை பூச்சந்தையில் ஓணம் சிறப்பு சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது. விடிய விடிய நடந்த பூச் சந்தையில் கேரளா வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். பல வண்ணங்களில் வித விதமான பூக்களை மக்கள் விரும்பி வாங்கி சென்றனர். கடந்த வருடங்களை விட இந்த ஆண்டு பூக்களின் விலை குறைவாக இருந்ததால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிச்சிப்பூ - 1,500 ரூபாயாகவும், மல்லிகை பூ - 1,000 ரூபாயாகவும், செவ்வந்தி - 350 ரூபாய், ரோஜா - 200 ரூபாய், தாமரை பூ - 8 ரூபாய் என அனைத்து பூக்களுமே விலை குறைந்து காணப்பட்டது. பூக்களின் வரத்து அதிகரிப்பால், இந்த விலை குறைவு என தோவாளை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகை காரணமாக ஏறத்தாழ 50 டன் அளவுக்கு பூ விற்பனை இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் தோவாளை பூ சந்தை களைகட்டியது.

இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி.. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!

Last Updated : Aug 28, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details