தமிழ்நாடு

tamil nadu

”வானம் பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் பாதுகாக்க வேண்டும்” - பொன். ராதாகிருஷ்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 5:51 PM IST

வானமே பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் மக்கள் வாழ வழி செய்ய வேண்டும். அப்படி பாதுகாப்பான மாநிலத்தை எங்கள் அரசால் உருவாக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

வானம் பிளந்து பத்து கங்கை கொட்டினாலும் எங்கள் அரசு மக்களை பாதுகாக்கும்
வானம் பிளந்து பத்து கங்கை கொட்டினாலும் எங்கள் அரசு மக்களை பாதுகாக்கும்

வானம் பிளந்து பத்து கங்கை கொட்டினாலும் எங்கள் அரசு மக்களை பாதுகாக்கும்

கன்னியாகுமரி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடியின் அரசு பத்து ஆண்டுகளாக ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான அரசை தரவேண்டும் என்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.

2004 முதல் 2014 வரை நம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு, ஊழலின் மொத்த வடிவமாக திகழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள், நல்ல அரசு வர வேண்டும் என மோடியை ஆட்சியில் அமர்த்தினார்கள். காங்கிரஸ் என்றால் ஊழல் என்ற அளவுக்கு தனது அடையாளத்தை வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினராக 3 முறை இருந்தவர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடக்கிறது.

அவரது வீட்டில் வருமான வரித்துறை ஒருவாரமாக சோதனை நடத்தியதில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 351 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வந்துள்ளது. அவரிடம் இருந்து 176 பேக்குகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 140 பேக்குகளை எண்ணியதிலேயே இவ்வளவு தொகை கண்டறியப்பட்டுள்ளது. இது போக தங்கம், வெள்ளி என கணக்கில் உள்ளது. ஐ.டி, இ.டி வேண்டாம் என்கிறார்கள். இந்த நாட்டை கொள்ளை அடிப்பதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

எம்.பியின் தொழிலுக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை என ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். ஆனால், அந்த பணத்தில் அவர்களுக்கு பங்கு இருக்கிறதா. ஏன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். உலக நாடுகள் நம்மைப் பார்த்து சிரிக்கக்கூடிய அளவில் காங்கிரஸ் இந்தியாவை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடுவார்கள். இல்லை விற்றுகூட விடுவார்கள். நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கேவலமான நிலையில் இருக்கும் காங்கிரஸை தண்டிக்கும் பொறுப்பு, நாட்டு மக்களுக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற முகமூடியையும், மக்கள் பிரதிநிதிகள் என்ற முகமூடியையும் வைத்துக்கொண்டு நடக்கிறார்கள்.

மத்திய அரசு கடுமையாக இருந்த போதும் இப்படி நடக்கிறது. விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்த காங்கிரஸின் பார்ட்னர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். மிக மோசமான அவலமான நிலைக்கு தமிழ்நாட்டின் தலைநகரம் தள்ளப்பட்டு இருக்கிறது. 4,000 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டோம், ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்றார்கள். இப்போது பாதி தான் செலவு செய்தோம் என்கிறார்கள். பாதி பணம் என்ன ஆனது என மக்கள் கேட்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பால் இல்லை என அமைச்சரிடம் கேட்டால், வியாக்கியானம் பேசுகிறார். இதற்காகவா அவரை அமைச்சர் ஆக்கி வைத்துள்ளோம் என கேள்வி எழுப்பினார். குழந்தைகளுக்கு பால், பசித்தவர்களுக்கு உணவு, மாற்ற உடை வேண்டும். இதையெல்லாம் அரசு தரவில்லை. நேற்று கர்ப்பிணியின் இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து கொண்டு போயிருக்கிறார்கள்.

அந்த உயிருக்கு இந்த அரசு என்ன பதில் கூறப் போகிறது. தங்க பெட்டியிலா கேட்டார்கள், ஒரு துணியில் வைத்து கொடுத்து இருக்கலாமே. யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் இந்த அரசு உள்ளது. இந்த அரசு தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர்கள். ஏன் இந்த கேவலமான நிலை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. பிற மாநிலம், பிற நாட்டவரும் தொழில் தொடங்க முடியாத அளவுக்கு சென்னையின் நிலை ஏற்பட்டுள்ளது.

2015ல் வெள்ளம் வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த முறை நாம் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என, 4,000 கோடி ரூபாய் பணத்தை ஸ்வாகா செய்துவிட்டார்கள். வெள்ளம், புயல் வருவதாக எத்தனை நாள்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் களத்தில் வேலை செய்யவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எல்லோரும் வெள்ளத்தில் இருக்கிறார்கள். வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் 6,000 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறீர்கள். அதை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கும்போது அழுத்தம் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை நான் உறுதியாக சொல்லுவேன்.

ஆனால், இன்றைய தமிழ்நாடு அரசின் சூழலை பார்க்கும் போது எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. மழை கணக்கு சொல்ல அரசு அமைக்கப்படவில்லை. வானமே பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் மக்கள் வாழ வழி செய்ய வேண்டும். அப்படி பாதுகாப்பான மாநிலத்தை பாஜகவால் உருவாக்க முடியும் என்றார்.

இதையும் படிங்க: மகளிர் திட்ட அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்..

ABOUT THE AUTHOR

...view details