ETV Bharat / state

சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி? அண்ணா பல்கலை துணைவேந்தரின் டிப்ஸ்! - How to Choose Engineering Colleges

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 9:14 PM IST

Engineering Colleges Admission: இளங்கலை பொறியியல் (BE),தொழில்நுட்ப இளங்கலை (B.Tech) படிப்பில் சேர்வதற்கு முன்னர் மாணவர்களுக்கு ஆர்வமும், கணக்கு பாடத்தில் விருப்பமும் உள்ளாதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்  புகைப்படம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புகைப்படம் (ச்credits -ETV Bharat Tamil Nadu)

சென்னை: 2024 - 25ஆம் கல்வியாண்டில் பிஇ (BE), பிடெக் (B.Tech) பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர். மே 6 முதல் 22ஆம் தேதி வரையில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 376 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்து 320 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் (ச்credits -ETV Bharat Tamil Nadu)

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரையில் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் சான்றிதழ்களை ஜூன் 13 முதல் 30ஆம் தேதி வரையில் சரிபார்க்க முடியும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ல் வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு முன்னர் கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியாதாவது, “நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் திறமையை தெரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் படிப்பதற்கு கணிதத்தில் அதிகமாக மதிப்பெண் இருக்க வேண்டும். கணிதம் பாடத்தை ஆர்வமாக படித்து, 12ஆம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதை பார்க்க வேண்டும். தாவரவியல், வரலாறு பாடங்களை விரும்பி படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து சிரமப்படுவார்கள்.

மாணவர்கள் விருப்பம்: பள்ளியில் படிக்கும் போதே விரும்பி படித்தால் தான் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள். வீட்டில் பெற்றோர் கூறுவதால் பொறியியல் படிப்பில் சேர்ந்து சிரமப்படுகின்றனர். எனவே, மாணவர்களுக்கு விருப்பம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு கல்லூரியில் சேர வேண்டும்.

கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது? மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்திருப்பார்கள். அதில், பண வசதி உள்ளவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் நல்ல கல்லூரியில் சேர்க்கின்றனர். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் சுமார் 40 கல்லூரிகளில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வகையில் சிறப்பான கல்லூரிகள் உள்ளன. மாநிலத்தில் சில கல்லூரிகளில் தரமான கல்வி அளிக்கப்பட்டு, 90 சதவீதம் வேலைக்கும், உயர்கல்விக்கும் வழிவகுக்கிறது.

ஆனால், இந்த கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரியில் கலந்தாய்வின் மூலம் 180 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் நிலையில், 160 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் செலவிட்டு கல்லூரியில் சேரலாம். ஆனால், கணிதத்தில் 50 முதல் 60 மதிப்பெண் வரையில் பெற்ற மாணவர்கள் சேர்ந்தால், அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்கள் குறைவான மதிப்பெண் பெறும் கடைசி மாணவர்களாக இருப்பார்கள். எனவே, இது போன்று தவறான முடிவினை எடுக்கக்கூடாது. 150 கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தருகின்றனர்.

Autonomous/Non Autonomous கல்லூரி: அண்ணா பல்கலைக்கழகத்தினால் நேரடியாக நடத்தப்படும் தேர்வில், தன்னாட்சி அங்கீகாரம் பெறாத 330 கல்லூரிகள் (Non Autonomous) மட்டும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சமீப காலங்களில் 100 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் (Autonomous) பெற்றுள்ளன. தன்னாட்சி அங்கீகாரம் பெறாத கல்லூரியில் 10 கல்லூரிகள் தரமாக உள்ளது. தனியார் கல்லூரியின் நிலை குறித்து சேர வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி கல்லூரிகள் நன்றாக இருக்கிறது. அரியலூர், பட்டுக்கோட்டை, திருக்குவளை ஆகிய கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் இருப்பதாலும் பாதிப்பு இருக்கிறது. இது போன்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் தான் ஆசிரியர்களுக்கும் ஆர்வம் இருக்கும். மாணவர்கள் எண்ணிக்கை குறையும் போது பாதிப்பு இருக்கிறது.

அதனை சரி செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறோம். உறுப்புக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான மண்டல அளவில் வேலை வாய்ப்பு நடத்துகிறோம். திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, 200 மாணவர்களுக்கு வேலை பெற்று தந்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரூ.40,000 சம்பளம்.. அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்த பாலிடெக்னிக் படிப்புகள் - ஆணையரின் உத்வேக வழிகாட்டுதல்கள்! - Polytechnic Courses Scopes

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.