தமிழ்நாடு

tamil nadu

குமரியில் விவசாய நிலத்தை தரிசாக மாற்றித்தர லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 2:21 PM IST

Female deputy tahsildar arrest issue: விவசாய நிலத்தை தரிசாக மாற்றித் தர ரூ.25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Female deputy tahsildar arrest issue
விவசாய நிலத்தை தரிசாக மாற்றித்தர லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது

விவசாய நிலத்தை தரிசாக மாற்றித்தர லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது... கையும் களவுமாக சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி:திங்கள் சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் உள்ள மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய அக்கா மகன் ராகுல், வெல்டிங் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு கண்டன்விளை பகுதியில் சுமார் 7 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளதாகவும், அந்த இடத்தில் அவர் வீடு கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால், வரைபட அனுமதி பெற முடியவில்லை. இதனையடுத்து, விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித் தர வருவாய் துறையிடம் ராகுல் விண்ணப்பம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு செய்து, அதன் கோப்புகளை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், இந்த விண்ணப்ப மனு தொடர்பான விபரத்தை துணை தாசில்தார் ருக்மணி (45) விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது குறித்து ராகுல் தனது சித்தி ஜெகதீஸ்வரி என்பவரிடம் தெரிவித்து உள்ளார். அதை அறிந்த ஜெகதீஸ்வரி, துணை தாசில்தார் ருக்மணியைச் சந்தித்து ராகுலின் விண்ணப்ப மனுவுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியாக கூறுகின்றனர்.

அதற்கு அவர் விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்ற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். பின்னர் ஜெகதீஸ்வரி பணம் கொடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெகதீஸ்வரி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஜெகதீஸ்வரியிடம் வழங்கியுள்ளனர்.

பின்னர் இந்த பணத்தை துணை தாசில்தார் ருக்மணியிடம் சென்று கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளனர். அதன்படி, தாலுகா அலுவலகம் சென்ற ஜெகதீஸ்வரி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி துணை தாசில்தார் ருக்மணியிடம் 25 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளார். அதனை அவர் வாங்கிக் கொண்டுள்ளார்.

பின்னர், இதனை அங்கு ஏற்கனவே கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான ஆய்வாளர் சிவசங்கரி, துணை ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்த 25 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கி உள்ளாரா என கணக்கு விபரங்களும் சரி பார்க்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் அங்கு ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண் துணை தாசில்தாரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மோசடி; 'ஒரு நாள் விடுமுறை' என ஒட்டிவிட்டு எஸ்கேப்பான பலே கில்லாடி!

ABOUT THE AUTHOR

...view details