தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்!

By

Published : Jan 17, 2022, 3:21 PM IST

காஞ்சிபுரத்தில் மூன்று மாதமாகக் குடிதண்ணீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
சாலை மறியல்

காஞ்சிபுரம்: மாநகராட்சிக்கு உள்பட்ட 45ஆவது வார்டு வழத்தீஸ்வரன் கோயில் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பெண்கள் திடீர் சாலை மறியல்

இப்பகுதியில் கடந்த மூன்று மாத காலமாகச் சரி வரக் குடி தண்ணீர் வரவில்லை எனப் பலமுறை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியினர் தங்களுக்குச் சரி வரக் குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலேன்கேட் அருகே காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை சமரசம்

இதையடுத்து இது குறித்துத் தகவலறிந்த சின்ன காஞ்சிபுரம் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்விகள் எழுப்பியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் காவல்துறையின் சுமுக பேச்சுவார்த்தைக்குப் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல நாள்களாக வீணாகக் கடலில் சென்று கலந்த பின்பும் கூட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!

ABOUT THE AUTHOR

...view details