தமிழ்நாடு

tamil nadu

தொடர் விடுமுறை காரணமாக எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் ரத்து!

By

Published : Nov 5, 2021, 5:10 PM IST

தீபாவளிப் பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக, நாளை (நவம்பர் 6) நடைபெற இருந்த எட்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

v
v

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனையில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தினை இன்று (நவம்பர் 5) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் 65 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக, நாளைய தினம் (நவம்பர் 6) நடைபெற இருந்த மாபெரும் தடுப்பூசி முகாமானது ரத்து செய்யப்படுகிறது.

இந்த முகாம் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும். கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளதால், இரண்டாம் தவணை போடவுள்ளவர்கள் எதிர்வரும் தடுப்பூசி முகாமில் கோவாக்சின் செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. பொது மக்கள் தங்களுக்கென தடுப்பூசி செலுத்திக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களுக்கு தடையில்லை. இவை தமிழ்நாட்டிற்குள் எளிதாகக் கடத்தி கொண்டு வந்து ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு

குட்கா விற்பனை குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்குப் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் அளிப்பவர்களின் தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் இதன் மூலம் புற்றுநோயை ஒழிக்க பேருதவியாக இருக்கும்' என்றார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி எழிலரசன், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்டப் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ‘100 விழுக்காடு தடுப்பூசி பட்டியலில் விரைவில் தமிழ்நாடு’ - மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details